போலீசாரால் தேடப்பட்ட தாதா பினு சரண்: நான் ஒன்றும் பெரிய ரவுடி இல்லை என புலம்பல்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      தமிழகம்
Binu 2018 01 13

Source: provided

சென்னை :  சென்னையை கலக்கிய ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தேடப்பட்டு வந்த பிரபல தாதா பினு, என்கவுன்ட்டர் பயத்தில் தானாக அம்பத்தூர் துணை ஆணையர் முன் சரணடைந்தார்.

போலீசுக்கு தகவல்....

கடந்த 6-ம் தேதி போலீஸார் வாகனச்சோதனையில் எதேச்சையாக ஏ-பிளஸ் பிரிவு ரவுடி மதன் (எ) பல்லுமதன் போலீசாரிடம் சிக்க, அவர் கொடுத்த தகவலின் பேரில் தாதா பினு தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனது பிறந்த நாள் விழாவில் 'ஜிகர்தண்டா' படப் பாணியில் கேக் வெட்டிய தாதா பினுவுடன் 150-க்கும் மேற்பட்ட சென்னையின் ஏ-பிளஸ் மற்றும் ஏ, பி, சி பிரிவு ரவுடிகள் கலந்துக்கொண்டனர். சில ஆர்வக்கோளாறு இளைஞர்களும் கலந்துகொண்டனர்.

சுற்றி வளைத்த....

தமிழக போலீஸ் வரலாற்றில் இது போன்ற மெகா ரவுடிகள் வேட்டை நடந்ததில்லை. சினிமாவை மிஞ்சும் அனைத்துக் காட்சிகளும் அன்று நடந்தன. பூந்தமல்லியில் ஒதுக்குபுறமான லாரி ஷெட் ஒன்றில் மொத்தமாக கூடிய ரவுடிகள் மது அருந்தி, கும்மாளமிட்டு கேக் வெட்டினர். அப்போது பிறந்த நாள் கொண்டாடிய தாதா பினு அரிவாளால் கேக்கை வெட்டினார். பின்னர் வேறொரு இடத்தில் பிரியாணி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் போலீஸார் சுற்றி வளைத்து விட்டனர். இதில் பிறந்த நாள் கொண்டாடிய பினு உள்ளிட்டோர் தப்பிச் சென்றனர். 150 ரவுடிகளில் 73 பேர் மட்டுமே பிடிபட்டனர். மீதி ஆட்கள் தப்பிச் சென்றனர். இதில் பினுவும் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

தாதா பினு சரண்...

இந்நிலையில் சென்னையில் ஆட்டம் போட்ட ரவுடிகள் பினு, அவரது கூட்டாளி விக்கி(எ) விக்னேஷ், நாகு (எ) நாகராஜ், அவர்களது பரம எதிரியான சி.டி.மணி அவரது கூட்டாளியும் பினுவின் சாம்ராஜ்யத்தை கைப்பற்றியவருமான அரும்பாக்கம் ராதா (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோரை எப்படியாவது பிடிக்கவேண்டும் என காவல்துறை மேலிடம் உத்தரவிட்டது. தேவைப்பட்டால் சுட்டும் பிடிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டதாக தகவல் பரவியது. பின்னர் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் தப்பி ஓடிய ரவுடிகளில் சிலர் பிடிபட்டனர்.

இதையடுத்து நேற்று காலை முதலே ரவுடி ராதாகிருஷ்ணன் சரண் என்ற தகவல் பரவிய நிலையில் திடீரென தாதா பினு அம்பத்தூர் துணை ஆணையர் முன் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பினுவின் கூட்டாளிகள் குறித்து விசாரணை நடக்கிறது. இந்நிலையில் என்கவுன்ட்டருக்கு பயந்து மற்றவர்களும் சரணடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பினு வாக்குமூலம்...

சரணடைந்த ரவுடி பினுவின் வாக்கும்மூலம் வீடியோவாக வெளியாகி உள்ளது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது., “ஐயா என் பேர் பினு, நான் பிறந்தது சென்னை,  பிறந்து, வளர்ந்தது எல்லாம் சூளைமேட்டில் தான். எனக்கு வயசு 50 ஆகுது. சுகர் பேஷண்ட். நான் கெட்ட சகவாசம் சேர்ந்து நிறைய ரவுடித்தனம் செய்து, நிறைய ஜெயில் வாசம் அனுபவித்து விட்டேன்.

வெளியில் வந்து திருந்தி வாழணும்னு ஓடி தலை மறைவாகிவிட்டேன். 3 வருஷமா தலைமறைவாக இருந்தேன். கரூரில் நான் இருந்த இடம் என் தம்பிக்கு மட்டும்தான் தெரியும். அவன் உனக்கு 50-வது பிறந்த நாள் வருது, நீ கொஞ்சம் சென்னைக்கு வா அண்ணா என்று கூப்பிட்டான். அவன் கூப்பிட்டதை வைத்து நானும் சென்னைக்கு வந்தேன். வந்த இடத்தில் இவன் சேர்த்து வச்ச ஆட்கள், மூன்று வருடம் ஆச்சே என்னைப்பார்த்து என்று எல்லோரும், எல்லா ரவுடிப்பசங்களும் வந்தார்கள். நான் கூட தம்பியிடம் ஏண்டா இப்படி செய்கிறாய்? என்று கேட்டேன்.

அப்ப என் தம்பி ஒன்றுமில்லை, அண்ணா நீ கேக் மட்டும் வெட்டி விட்டு போய்விடு என்று கூறினான். நான் அதை நம்பி கேக்கை வெட்டிட்டு, கிளம்பலாம் என்று முடிவு செய்யும் போதுதான் போலீஸ் ரவுண்டப் செய்து விட்டார்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, நான் என்ன செய்வது என்று தெரியாமல், குதித்து எஸ்கேப் ஆகி ஓடிவிட்டேன்.

ஆனால் சென்னை போலீஸ் என்னை ரவுண்டப் செய்து எங்கே போனாலும் என்னை விடுவதாயில்லை. அதனால் என்னால் எதுவும் பண்ணமுடியல, அதனால் நானே இங்க நேரா வந்துட்டேன். எனக்கு மன்னிப்பு கொடுத்து விடுங்க. நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடியெல்லாம் கிடையாது.” என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து