முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் புளோரிடாவில் பயங்கரம்: பள்ளி கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது முன்னாள் மாணவர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் பார்க்லேண்ட் நகரில் உயர்நிலை பள்ளி கூடம் ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.  இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த காவல்துறையினர் மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

17 பேர் பலி...
இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 17 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நிகோலஸ் கிரஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  எப்.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணைக்கு உதவியாக உள்ளனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

துப்பாக்கி குண்டுகள்...
நிகோலஸ் ஒழுங்கீன காரணங்களுக்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.  இதுபற்றி புரோவார்டு நகர ஷெரீப் ஸ்காட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, நிகோலஸ் கொலைகாரன்.  அவன் போலீசாரின் காவலில் உள்ளான்.  அவனது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.  அவனிடம் நிறைய துப்பாக்கி குண்டுகள் வைக்கும் உறைகள் உள்ளன.  அதனால் ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி ஒன்று அவனிடம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இச்சம்பவத்தில் 12 பேர் கட்டிடத்தின் உள்ளேயும், 2 பேர் கட்டிடத்தின் வெளியேயும், ஒருவர் பள்ளி கூடத்தின் வெளியே தெருவிலும் கொல்லப்பட்டு கிடந்தனர்.  2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

அதிபர் ட்ரம்ப் ஆறுதல்...
இதனிடையே இது தொடர்பாக ஃப்ளோரிடா மாகாணா ஆளுநரை தொடர்பு கொண்ட அதிபர் ட்ரம்ப், சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்டுள்ளார். மேலும், பள்ளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அதிபர் ட்ரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பள்ளிகளில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி, அதில் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து