மேட்டூர் அணையில் நீர் திறப்பு - 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      தமிழகம்
mettur dam 2019 09 10

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 67 ஆயிரத்து 931 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 7-ம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை நீர் திறப்பு 65 ஆயிரம் கன அடியில் இருந்து 60 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. பின்னர் இரவு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இதே போல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 700 கன அடியில் இருந்து 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக 75 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120.74 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. காவிரி கரையோர கிராமங்களில் தொடர்ந்து தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதே போல் டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐவர்பாணி அருவி பகுதியில் அருவிகளே தெரியாத அளவிற்கு வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து