ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      தமிழகம்
National Investigation Agency 2019 10 14

சென்னை : ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 

டெல்லியில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் கி‌ஷன்ரெட்டி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் ஒய்.சி.மோடி, முன்னாள் உளவுத்துறை இயக்குனர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் பேசினர். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் கூறியதாவது:-

பயங்கரவாதத்திற்கு எதிராக பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஏற்கனவே பாகிஸ்தானை பல்வேறு தடவை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது. தற்போது அந்த சர்வதேச அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கூடி பயங்கரவாதிகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் நாடுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.

பாகிஸ்தான் அரசு எப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது. பாகிஸ்தானின் இந்த செயல் நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதை சர்வதேச நாடுகளிடம் நிரூபிக்க இன்னும் போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு வங்கிகள் மூலம் உதவி செய்வதை தேசிய புலனாய்வு அமைப்பு மிக திறமையாக கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தேவையான அளவுக்கு நிதி கொடுக்கிறது. இதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதிகள் பற்றி தகவல் தரும் உளவுத்துறையால் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழித்து விட முடியாது. அவர்களுக்கு உதவும் பண பரிமாற்றம் உள்பட அனைத்தையும் வேரறுக்கும் உங்களைப் போன்றவர்களால்தான் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியும். போர் வந்தால் அனைவருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பயங்கரவாதத்திற்கு நாம் அனைத்து வகையிலும் முடிவு கட்ட வேண்டும். இத்தகைய வழிகாட்டுதல்களின் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் வெற்றி பெற முடியும். இவ்வாறு அஜித்தோவல் கூறினார்.

அவரை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக்மிட்டல் பேசினார். அவர் கூறியதாவது:-

தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு சதி திட்டங்கள் முன்னதாக முறியடிக்கப்பட்டன. காலிஸ்தான் சதி முழுமையாக தகர்க்கப்பட்டது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். பெங்களூரில் அவர்கள் 22 இடங்களில் முகாம்கள் அமைத்து இருந்தனர். அவர்கள் பதுங்கி இருந்த இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அந்த இடத்தில் இருந்து கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செயல்பாடுகள் மூலம் தென்னிந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும், வங்கதேச பயங்கரவாதிகளும் காலூன்ற முயற்சி செய்தது தெரிய வந்தது.

இந்த பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்லாமிய மதகுரு ஜாகீர்நாயக் பேச்சால் கவரப்பட்டு பயங்கரவாத இயக்கத்துக்கு வந்தது தெரிய வந்தது. நாடு முழுவதும் இவர்கள் மிகப்பெரிய நெட் வொர்க்கை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தனர். அந்த நெட்வொர்க்கை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். இதையடுத்து நாடு முழுவதும் அதிரடி வேட்டைகள் நடத்தப்பட்டன. கைதான 127 பேரில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 33 பேர் பிடிபட்டனர். உத்தரபிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கைதான பயங்கரவாத ஆதரவாளர்கள் தாங்கள் இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஜக்ரன் ஹசீம் பேச்சால் கவரப்பட்டோம் என்று வாக்குமூலம் அளித்தனர். அவர்களுக்கும், சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. குறிப்பாக இந்த பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத் உல் முஜாகிதீன் (ஜெஎம்பி) என்ற அமைப்புடனும் தொடர்பில் இருந்தனர்.

வங்கதேசத்தில் ‌ஷரியத் சட்டப்படி ஆட்சியை உருவாக்க ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நடமாட்டம் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய 4 மாநிலங்களில் அதிகரித்துள்ளது. ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் இந்தியாவில் உள்ள புத்த மத வழிபாட்டு தலங்களை குண்டு வைத்து தகர்க்க ரகசிய திட்டம் தீட்டி இருந்தனர். இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர். பர்மாவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்த அவர்கள் நினைத்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரித்தது. இதன் காரணமாக பல பயங்கரவாத செயல்கள் தொடக்கத்திலேயே கிள்ளி எறியப்பட்டன.

பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் மூலம் பயங்கரவாத செயல்களை உருவாக்க பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியது. அந்த சதியும் முறியடிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் 8 இடங்களில் காலிஸ்தான் குழுக்கள் படுகொலைகளை செய்தது. இதன் மூலம் கலவரங்களை உருவாக்க நினைத்தனர். இதற்காக பாகிஸ்தான் பெரிய அளவில் பண உதவியை செய்தது. பாகிஸ்தானில் இருந்து இந்திய ரூபாய் நோட்டுகளை போல கள்ள நோட்டுகளை அச்சடித்து பல கோடிக்கு விநியோகித்தனர். இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் கூட காலிஸ்தான் விடுதலை அமைப்புக்கு பண உதவிகள் வந்தன. இது தொடர்பாக 16 பேரை கைது செய்து காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை முடக்கி உள்ளோம்.

அமெரிக்காவில் இயங்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் இந்தியாவில் சீக்கிய இளைஞர்களின் செயல்பாடுகளை மாற்ற முயற்சி செய்தனர். அதையும் தடுத்து நிறுத்தி உள்ளோம். இது தொடர்பாக உத்தரபிரதேசத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2020-ம் ஆண்டுக்குள் தங்களது இலக்கை அடைய பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரிந்தது. அதுபோன்று காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தான் ஏராளமாக பணம் கொடுத்து உதவுகிறது. இந்தியாவுக்கான தூதர் மூலம் இந்த பணம் வினியோகிக்கப்படுகிறது. காஷ்மீரில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூத்த பிரிவினைவாதிகள் பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் இதுவரை ஜாமீனில் விடுபடவில்லை. அவர்கள் அனைவரும் ஹவாலா அடிப்படையில் பாகிஸ்தான் தூதரிடம் இருந்து பணம் பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாகிஸ்தான் அச்சடித்து இந்தியாவுக்குள் பரவ விடுவதையும் இவர்கள் மூலம் கண்டு அறிந்துள்ளோம். இவ்வாறு தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் கூறினார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து