முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எஸ்.டோனி குறித்து பேனர்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      விளையாட்டு
Dhoni 2023-10-03

Source: provided

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இந்த ஆட்டம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கே வருகை தரும் எம்.எஸ். டோனிக்கு எதிரணி என்று பார்க்காமல் லக்னோ அணி நிர்வாகம் சார்பில் முக்கிய இடங்களில் சாலை ஓரங்களில் பெரிய பேனர்கள் வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு பேனரில் "எங்களுக்கு டோனி சிறப்பாக விளையாட வேண்டும். அதே சமயம் போட்டியில் லக்னோ வெற்றி பெற வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு பேனரில் "எங்களுக்கு கடைசி பந்தில் டோனி சிக்சர் அடிக்க வேண்டும். ஆனால் அப்போது வெற்றி பெறுவதற்கு கடைசி பந்தில் 12 ரன்கள் தேவையாக இருக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த 2 பேனர்களின் அடியில் "34வது லீக் போட்டி என்பது 3 மற்றும் 4 சேர்ந்த 7வது நம்பரை குறிக்கிறது. அதற்கு காரணம் தல (டோனியின் ஜெர்சி எண்)" என்றும் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிரணியாக இருந்தாலும் டோனி நன்றாக விளையாட வேண்டும் என்று மிகவும் மதிப்பளித்து லக்னோ நிர்வாகம் கொடுத்துள்ள இந்த வரவேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

_____________________________________________________

பஞ்சாப் வீரருக்கு பாராட்டு

ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 19.1 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணி வீரர் ஆசுதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் அடித்து மும்பைக்கு பயத்தை காட்டினார். இதில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் பும்ராவின் யார்க்கர் பந்தினை ஸ்வீப் ஷாட் அடித்தார். இந்த சிக்ஸரை குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பஞ்சாப் அணிக்கு ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் விளையாடிய நான்கு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார். 4 போட்டிகளில் 156 ரன்கள் 205 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். சராசரி 52 என்பது குறிப்பிடத்தக்கது. ஆசுதோஷ் சர்மாவின் ஐபிஎல் இன்னிங்ஸ்: குஜராத் அணிக்கு எதிராக 31 (17), சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 33* (15).ராஜஸ்தான் அணிக்கு எதிராக 31 (16), மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 61 (28)

_____________________________________________________

பும்ராவுக்கு இயன் பாராட்டு

நடப்பு ஐ.பி.எல்.லில் மும்பையின் இந்த 3 வெற்றிக்கும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவே காரணம் என்று சொல்லலாம். அந்த அணியின் மற்ற பவுலர்கள் எல்லாம் ரன்களை வாரி வழங்கி வர, அவர் மட்டுமே சிக்கனமாக பந்து வீசுவது மட்டுமின்றி முக்கியமான தருணங்களில் விக்கெட்டும் வீழ்த்தி வருகிறார். குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா, நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 3 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றி பெற உதவினார். இதன் மூலம் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் வேகப்பந்து வீச்சில் பிஎச்டி என்னும் பட்டம் இருந்தால் அதை பும்ராவுக்கு கொடுக்கலாம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இயன் பிஷப் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. "ஒருவேளை ஜஸ்பிரித் பும்ராவை "வேகப்பந்து வீச்சாளர் பிஎச்டி" எனும் பட்டத்தின் வாயிலாக அபிஷேகம் செய்ய முடிந்தால் அதை நான் செய்வேன். அவர் ஒரு அற்புதமான பவுலர். பல்வேறு நாடுகளில் அனைத்து மட்டங்களிலும் ஆர்வத்துடன் இருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர் பந்து வீச்சு பற்றிய விரிவுரைகளை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்காக அவர் ஓய்வு பெறும் வரை நான் காத்திருக்க மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

_____________________________________________________

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக ஆடிய கேப்டன் ஹேலி மேத்யூஸ் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால், துபா ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 270 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 35.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துபா ஹாசன் 25 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

_____________________________________________________

வருத்தம் அளிக்கிறது: சாம் கர்ரன்

மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு போட்டியை நெருங்கி வந்து தோற்றுள்ளோம். இந்த ஆட்டம் மிக நெருக்கமாக வந்தது. ஆனாலும் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது. அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் இந்த போட்டியிலும் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பாக இருந்தது. உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது போன்ற நெருக்கமான போட்டிகளில் தோல்வியை சந்தித்தால் அதை ஏற்றுக்கொள்ள நேரம் பிடிக்கும். ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் போராடினர். அவர்களது நம்பிக்கை நம்ப முடியாத வகையில் இருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கூட அசுதோஷ் சர்மா ஸ்வீப் ஷாட்டுகளின் மூலம் பெரிய பெரிய சிக்ஸர்களை அடிக்கிறார். அவரது ஆட்டத்தை பார்க்க நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்ததில் வருத்தமே. எங்களது அணியில் உள்ள சில குறைகளை நீக்கிவிட்டு நாங்கள் தேவையான இடத்தில் எங்களை பலப்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து