முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஊழல்: ப.சிதம்பரத்தை விசாரிக்க ராசா போர்க்கொடி

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,செப்.- 27 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பி அவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா டெல்லி கோர்ட்டில் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.  நாட்டையே உலுக்கிய ஊழல் என்றால் அது ஸ்பெக்ட்ரம் ஊழலாகத்தான் இருக்க முடியும். காரணம், இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடியாகும். இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது உதவியாளர்கள் சந்தோலியா, பெகூரா உட்பட பலர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழி, ராசா இருவருக்குமே இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. தொடர்ந்து இவர்கள் திகார் சிறையில் இருந்து வருகிறார்கள்.  இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராசா மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த புதிய குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் இவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டு கால சிறை தண்டனையோ கிடைக்கும். இ.பி.கோ. 409 வது பிரிவின் கீழ் இவர்கள் மீது புதிய குற்றச்சாட்டை தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. சுமத்தியுள்ளது. 

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் ஆ. ராசாவின் சார்பாக மூத்த வழக்கறிஞர் சுசில்குமார் ஆஜராகி நேற்று வாதிட்டார். அப்போது அவர், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு வழக்கில் முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பி அவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று சிறையில் இருக்கும் ராசா சார்பாக கேட்டுக் கொண்டார். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்குகளை விற்கும் பிரச்சினை தொடர்பாக ப. சிதம்பரம் விளக்கமளித்தது சம்பந்தமாக அவரிடம் மத்திய புலனாய்வு துறை வாக்குமூலத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் சுசில்குமார் வாதாடினார். 

மேலும் பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் பங்குகளை விற்கும் பிரச்சினை தொடர்பாக சிதம்பரம் ஏதும் அறிவுரை அல்லது ஆலோசனை கூறினாரா? என்பது பற்றியும் சிதம்பரத்திடம் கேட்கப்பட வேண்டும் என்றும் ராசாவின் வழக்கறிஞர் கோர்ட்டில் வலுவாக வாதாடினார். சிதம்பரத்தை இந்த கோர்ட்டுக்கு வரவழையுங்கள். அவரிடம் பிரதமர் முன்னிலையில் அமைச்சரவை கூட்டம் நடந்ததா, இல்லையா என்று கேளுங்கள். மேலும் ஆலோசனை கூறினாரா, இல்லையா என்றும் கேளுங்கள். உடனே அவரை வரவழைத்து சாட்சியாக விசாரியுங்கள் என்றும் ராசாவின் வழக்கறிஞர் சுசில்குமார் வாதாடினார். 

மேலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 311 வது பிரிவின் கீழ் இந்த நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்ப வேண்டும். அவரை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் ராசாவின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், பங்குகள் விற்பது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். எனவேதான் நான் அவரை அழைக்க கோருகிறேன். அவரை நான் குற்றவாளி என்று சொல்லவில்லை. ஆனால் அவரை அழைத்து விசாரிக்க வேண்டும். புலனாய்வு துறையும் அவரிடம் வாக்குமூலம் பெற்றிருக்க வேண்டும் என்றும் ராசாவின் வழக்கறிஞர் வாதாடினார். இந்த வாதத்தால் நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுப் போனது. 

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு மேலும் ஒரு தகவல் வெளியானது. அதாவது, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய ஒரு குறிப்பில், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஏலம் விட்டிருக்கலாம் என்றும், ஆ. ராசாவும், சிதம்பரமும்தான் ஸ்பெக்ட்ரம் விலைகளை நிர்ணயம் செய்தனர் என்றும், அந்த குறிப்பில் அவர் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமீப காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ப. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. ஆனால் அதை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்து விட்டது. பிரதமரும் சிதம்பரத்துக்கு ஆதரவாக இருப்பதாக சில பத்திரிக்கை செய்திகள் சமீபத்தில் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்