முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி முதல்வர் ஆகிறார் நாராயணசாமி: கட்சியினர் எதிர்ப்பு

சனிக்கிழமை, 28 மே 2016      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி - புதுச்சேரி முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும், கூட்டணி கட்சியான திமுக 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் முதல்வராவது யார் என்ற இழுபறி ஏற்பட்டது.  மாநில தலைவரான நமச்சிவாயம் முதல்வராக வேண்டும் என காங்கிரசில் ஒரு பிரிவினரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியபொதுச்செயலாளரான நாராயணசாமி முதல்வராக வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கட்சித்தலைமையை வலியுறுத்தினர்.

இதனால் முதல்வர் பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.  இதையடுத்து நேற்று நண்பகல் 12 மணிக்கு காலாப்பட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் ஷீலா தீட்சித், முகுல்வாஸ்னிக் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது. முதலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15 பேரிடமும் ஒரே நேரத்தில் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு எம்எல்ஏவையும் தனித்தனியே அழைத்து கருத்து கேட்டனர். இந்த கூட்டத்தில் பல கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டு எம்.எல்.ஏ.க்களோடு மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.  அதைத்தொடர்ந்து மேலிட பார்வையாளர் ஷீலா தீட்சித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ''புதுச்சேரி முதல்வராக நாராயணசாமியை நியமிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை மாநிலத்தலைவர் நமச்சிவாயம் முன்மொழிந்தார்.

முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் வழிமொழிந்தார். கட்சித்தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். தொலைபேசி மூலம் வாழ்த்துகள் தெரிவித்தனர்" என்று குறிப்பிட்டார்.  அதைத்தொடர்ந்து முதல்வராக தேர்வான நாராயணசாமி கூறுகையில், " புதுச்சேரி மாநில முதல்வராவதற்கு மாநிலத்தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். எம்.எல்.ஏ.க்கள் கருத்தொற்றுமையுடன் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆட்சி அமைப்பது, பதவியேற்பது தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இதையடுத்து கட்சியினர் நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த அறையிலிருந்து சோகமான முகத்துடன் நமச்சிவாயம் வெளியேறினார். ஹோட்டலுக்கு வெளியே திரண்டிருந்த அவரது தொண்டர்கள் தகவலையறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு நமச்சிவாயத்தை முற்றுகையிட்டு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு, கட்சிக்கட்டுப்பாட்டை மீறக்கூடாது. அனைவரும் புறப்படுங்கள் என்று நமச்சிவாயம் கூறிவிட்டு புறப்பட்டார்.  அதையடுத்து நாராயணசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கிழக்கு கடற்கரை சாலையில் ஹோட்டலுக்கு வெளியே நமச்சிவாயம் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். சுமார் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்