முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8, 400 கன அடியாக அதிகரிப்பு

திங்கட்கிழமை, 29 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 200 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளின் பாதுகாப்பு கருதி 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுலை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது. ஒகேனக்கலில் தற்போது 8 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை நாளான நேற்று முன்தினம் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அவர்கள் தொங்கு பாலத்தில் நின்ற படி பல மாதங்களுக்கு பிறகு அருவிகளில் கொட்டும் தண்ணீரை பார்த்து ரசித்தனர்.

பின்னர் உடல் முழுவதும் எண்ணை தேய்த்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 7-வது நாளாக நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 200 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் உயர்ந்து வருகிறது.

கடந்த 23-ம் தேதி 39.13 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 45.33 அடியாக இருந்தது. இதனால் கடந்த 6 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து