தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகை : ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      தமிழகம்
Modi 2024-10-24

Source: provided

ராமேசுவரம் : புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த  மாதம் தமிழகம் வருகிறார். ஏற்பாடுகள் குறித்து ரெயில்வே, காவல்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு நடத்தினர்.

தமிழகத்தின் தென்கோடியில் அமைந்து உள்ளது ராமேசுவரம். புனித நகரமான இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள். ரெயிலில் வருபவர்கள் ராமேசுவரம் செல்வதற்காக மண்டபத்தையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

1914-ல் அமைக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 2.3 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையுடையது. நிலப்பரப்பை ராமேசுவரம் தீவுடன் இணைக்கும் இந்த பாலத்தை கப்பல் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுவில் கத்திரி வடிவில் தூக்குகளும் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது அந்த தூக்கு திறந்து கொள்ளும். அதன் பிறகு மூடிக் கொள்ளும். இந்த பாலம் நூறு வயதை தாண்டி விட்டதால் இதன் அருகிலேயே கடந்த 2020-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக பழைய பாலத்தில் இருந்த 'ஷெர்ஜர்' தூக்கு பாலத்திலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் கடல் மீது அமைந்துள்ள சாலை பாலம் வழியாகவே ராமேசுவரம் சென்று வருகிறார்கள். பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்ட தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும். இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.

அதன் பின்பு பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு ரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதமே திறப்பு விழாவை நடத்த ரெயில்வே நிர்வாகம் தயாரானது. ஆனால் பல்வேறு காரணங்களால் திறப்பு விழா நடத்துவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இப்போது இந்த பாலத்தை பிரதமர் மோடி திறப்பது உறுதியாகி உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) திறப்பு விழா நடக்கிறது.

திறப்பு விழா ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா உள் ளிட்ட உயர் அதிகாரிகள் ராமேசுவரம் வந்தனர். இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை பார்வையிட்டனர். பின்னர் பாம்பன் பாலத்தில் நின்று புதிய, பழைய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியதாவது:- பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் திறப்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரே ராமேசுவரம் ரெயில் நிலையப் பணிகள் முடிவடையும் என்றார்.

மீண்டும் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை மதுரையில் இருந்து சிறப்பு ரெயில் மூலமாக ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். திறப்பு விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் செய்யப்பட வேண்டிய விரிவான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் கட்டிட வளாகத்தில் மேடை அமைத்து பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த இடத்தில் மேடை அமைப்பது தொடர்பாகவும், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் மண்டபம் பொதுப் பணித்துறை ஹெலிபேட் தளம், குந்துகால் பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷார் தலைமையிலான ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அவர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவுக்கான தேதி இன்னும் உறுதியாகவில்லை. ஏப்ரல் முதல் வாரத்தில் 5-ந்தேதி பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும் இலங்கை அதிபருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது அவர் பாம்பன் பாலத்தையும் திறந்து வைக்க வரலாம் என்று கருதப்பட்டது. ஆனால் வெளிநாட்டு பயணத்துடன் இந்த நிகழ்ச்சியையும் சேர்த்து நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அடுத்தமாதம் (ஏப்ரல்) 3-வது வாரத்தில் பால திறப்பு விழாவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த மாத இறுதிக்குள் தேதி உறுதியாகி விடும் என்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து