முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      தமிழகம்
Murder 2023-07-06

Source: provided

மதுரை: மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வீ.கே.குருசாமி. மதுரை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரான இவருக்கும், அவரது உறவினரும் அ.தி.மு.க. பிரமுகருமான ராஜபாண்டி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட விரோதம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

இந்த பிரச்சினையில் தற்போதுவரை இருதரப்பை சேர்ந்த 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அரசியிலில் உச்சத்தில் இருந்த வீ.கே.குருசாமி தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அங்கும் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.

இந்தநிலையில் வீ.கே.குருசாமியின் ஆதரவாளரும், பிரபல ரவுடியுமான காளீஸ்வரன் என்பவர் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதுபற்றிய விபரம் வரு மாறு:-

மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 37). இவர் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெண்கலமூர்த்தி தெருவில் தனது இரண்டா வது மனைவி மீனாட்சி என்பவரது வீட்டில் ஒரு மாதமாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தவர் நேற்று அதிகாலை சுமார் 12.40 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் தனக்கன்குளம் பகுதியில் வைத்து காளீஸ்வரனை வழிமறித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத காளீஸ்வரன் அவர்களது பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அந்த கும்பல் யார் என்று தெரியவில்லை.

இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த காளீஸ்வரன் மீது ஏற்கனவே தெப்பக்குளம், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

வி.கே.குருசாமி தரப்பினருக்கும், வெள்ளைக்காளி தரப்பினருக்கும் ஏற்கனவே பழிவாங்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரனை வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து உடைக்க முயன்றனர்.

பின்னர் வேகமாக சென்ற அந்த வாகனம் அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது. அங்கு காளீஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு பதட்ட மான சூழல் நிலவுவதால் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குருசாமி தரப்பில் 10 பேர், ராஜபாண்டி தரப்பில் 7 பேர் என 20 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். வி.கே.குருசாமி, ராஜ பாண்டி, வெள்ளைக்காளி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வெள்ளைக்காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து கொண்டே அவர் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக தெரிகிறது.

வெள்ளைக்காளி தனது அண்ணனை வீ.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப்போவதாக சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாக குருசாமி ஆதரவாளர்களை கொலை செய்து வந்தார். வெள்ளைக் காளியைப் பொறுத்தவரை 40-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

வி.கே. குருசாமி தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி தனியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜபாண்டி இறந்து விட்டார். இதனால், வீ.கே.குருசாமியை பழிவாங்கும் நோக்கில் வெள்ளைக்காளி செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து