முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களுக்கு 4-வது முறையாக காவல் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜன, 10 - இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட தமிழக மீனவர்கள் நால்வருக்கு இலங்கை நீதிமன்றம் நான்காவது முறையாக காவலை நீட்டித்து உத்திரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் பாண்டியன், தாமோதரன், கிஷோர் மற்றும் வீரமணி ஆகிய நான்கு பேர் சென்ற விசைப்படகு கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் திடிரென்று வீசிய பலத்தக்காற்றில் விசைப்படகில் மூழ்கத் தொடங்கியது. உடனே விசைப்படகில் இருந்த மீனவர்கள் நான்கு பேரும் பலகைகள் மற்றும் பிளாஸ்டிக் கேன்களின் உதவியுடன் கடலில் தத்தளிக்கத் துவங்கினர்.

டிசம்பர் 5ம் தேதி அதிகாலையில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் காப்பாற்றி முதலுதவி செய்தனர். பின்னர் மீனவர்களை நெடுந்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நெடுந்தீவு காவல்துறையினரிடம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள், பலத்த காற்றில் எங்கள் படகு மூழ்கி விட்டது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த எங்களை இலங்கை கடற்படையினர் தான் காப்பாற்றினர் என்று கூறியுள்ளனர். ஆனால் நெடுந்தீவு காவல்துறையினரோ நீங்கள் பிடிபட்டது இலங்கை பகுதி என்று கூறி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்கள் நான்குபேரையும் விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரின் காவல் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில் மீண்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி மகேந்திர ராஜா மீனவர்களின் காவலை ஜனவரி 23 வரை நான்காவது முறையாக நீட்டித்து உத்திரவிட்டார்.

இதனையடுத்து புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் யாழ்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்