முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.19 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உள்பட 3 பேர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று 3 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹூரா, ஸ்வான் கம்பெனி நிறுவனர் பால்வா உள்பட பலர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் லாபம் அடைந்த கம்பெனியான ஸ்வானில் இருந்து சினியுக் நிறுவனம் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி கைமாறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலைஞர் டி.வி.யில் 20 சதவீத பங்கு உடைய கனிமொழியும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலில் இவர்கள் கைது செய்யப்பட்டவுடன் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் இவர்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் குற்றப்பத்திரிகையும் மே மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையும் சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவைகளில் இவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

அடுத்து 3-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் 3-வது குற்றப்பத்திரிகையில் சில தகவல்கள் மற்றும் தஸ்தாவேஷூகள் சேர்க்கப்பட இருப்பதால் ஆ.ராஜா,சித்தார்த்த பெஹூரா, கெளதம் ஜோஷி ஆகியோர்களை மீண்டும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதாடினர். ராசா உள்பட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவர்களிடமும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுவிட்டது. அதனால் மீண்டும் அவர்களை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்கக்கூடாது என்று ராசா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில் 3-வது குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சில தகவல்கள் மற்றும் தஸ்தாவேஜூகளை சேர்க்க வேண்டியுள்ளது. அதனால் அந்த 3 பேர்களை மீண்டும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்க வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, ராசா உள்பட அந்த 3 பேர்களையும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். மேலும் விசாரணையின்போது கிடைக்கும் புதிய தகவல்கள் மற்றும் கிடைத்துள்ள தஸ்தாவேஜூகள் குறித்தும் 3-வது குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறினார். 

இதனையடுத்து நேற்று ஆ.ராசா, சித்தார்த்த பெஹூரா, கெளதம் ஜோஷி ஆகியோர்களை திகார் சிறையில் இருந்து நீதிமன்ற காவலில் சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்தனர். பின்னர் அவர்களை நேற்று பிற்பகல் 2 மணிக்கு வரவழைத்து 5 மணி வரை துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டார்கள் தெரிவித்தன. அந்த முக்கிய தகவல்கள் 3-வது குற்றப்பத்திரிகையில் பதவி செய்யப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 3-வது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்று உறுதியாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்