முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மரணம்: பிரதமர் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை,செப்.20 - பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல்நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 45. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

1969-ம் ஆண்டு, ஆந்திர மாநிலம் பாலகோலில் ஸ்ரீநிவாஸ் பிறந்தார். இவரது தந்தை சத்யநாராயணன் மாண்டலின் இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை இசைக்கக் கற்று மிகச் சிறிய வயதிலேயே சிறந்த கலைஞராக விளங்கினார். இவரது சகோதரர் யு.ராஜேஷும் இசைக் கலைஞராவார்.

கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்நிலையில், நேற்றுக்காலை அவரது உயிர் பிரிந்தது.

மாண்டலின் ஸ்ரீநிவாஸ், 1998-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது, 2010-ல் சங்கீத நாடக அகாடமி விருது ஆகிய விருதுகளைப் பெற்றார்.

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இசைத்துறையில் ஸ்ரீநிவாசஸின் நீண்ட கால பங்களிப்பை நினைவு கூர்வதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இசைத்துறையில் ஸ்ரீநிவாசஸின் நீண்ட கால பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கலை காலத்தால் அழியாதது. என்றும் அவர் நினைவைவிட்டு நீங்க மாட்டார்" என குறிப்பிட்டுள்ளார்.

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். "மாண்டலின் ஸ்ரீநிவாஸ் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. அடுத்த உலகத்தில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்" என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்