முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் முடிவுகள் வரலாற்று சிறப்புடையது: பிரதமர்

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.21 - மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தல் முடிவுகள் வரலாற்று சிறப்பு மிக்கவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஹரியாணாவில் அந்தக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிரத்தில் சிவசேனா அல்லது தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின.

மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 123 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனாவுக்கு 63, தேசியவாத காங்கிரஸுக்கு 41, காங்கிரஸுக்கு 42 இடங்கள் கிடைத்துள்ளன.

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாததால் சிவசேனா அல்லது தேசியவாத காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பாஜக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

மாநிலத்தில் மீண்டும் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி யோசனை கூறியுள்ளார்.

இதனிடையே மகாராஷ்டிர நிலவரம் குறித்து ஆலோசிக்க பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் நேற்றுமுன்தினம்நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித் ஷா, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. நாக்பூர் தென்மேற்கு தொகுதி யில் போட்டியிட்ட அவர் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே பார்லி தொகுதியில் வெற்றிபெற்றார். முதல்வர் பதவிக்காக அவரும் காய் நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.

ஹரியாணா சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 15 இடங்களையும் இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களையும் பெற்றுள்ளன. ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ் 2 இடங்களிலும் சிரோமணி அகாலி தளம் ஓர் இடத்திலும் சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஹரியாணாவில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 47 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் அந்தக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதன்மூலம் காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கத்தார் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்தேர்தல் முடிவு கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. இம்முடிவுகள் பாஜகவுக்கு பெருமையும் மிகுந்த மகிழ்ச்சியும் அளித்துள்ளது. கட்சித் தொண்டர் களின் அயராத உழைப்புக்காக அவர்களை வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மற்றொரு செய்தியில், "ஹரியாணா மக்கள் தங்கள் கனவுகள் நிறைவேறவும் வளர்ச்சிப் பயணத்தில் மாநிலத்தை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்லவும் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். இதற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்