முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடல்லி, மார்ச்.- 5 - தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் தலைவர்கள் விதிமுறைகளை மீறி நடந்தனர். அதனால் பல அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைகள் குறித்து அமைச்சர்கள் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளனர். மேலும் தேர்தல் விதிமுறைகளுக்கு அரசியல் சட்ட அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் திட்டம் திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் கமிஷனுக்கு சட்ட விதிகளின் கீழ் போதுமான அதிகாரம் உள்ளது. அதனால் தேர்தல் கமிஷனுக்கு மேலும் அதிகாரம் தேவையாக இருக்காது என்றார். எங்களுக்கு மேலும் எந்தவித அதிகாரமும் தேவையில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் போதுமான அளவுக்கு உள்ளது. அதேசமயத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு நவீன காலத்திற்கு தகுந்தவாறு தண்டனை அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் குரேஷி கூறினார். தேர்தல் கமிஷனுக்கு அதிக அதிகாரம் தேவையா என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த குரேஷி, எங்களுக்கு போதுமான அதிகாரம் உள்ளது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். அதை அவைகளை நியாயமாகவும் பயன்படுத்தியுள்ளோம் என்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதமும் தண்டனையும் கேலிக்கூத்தான முறையில் இருக்கிறது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தற்போதுள்ள விதிமுறைகளின்படி வெறும் ரூ.500 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இதை தற்போதுள்ள காலத்திற்கு ஏற்றபடி மாற்றி தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தேர்தல் விதிமுறைகளுக்கு அரசியல் சட்ட பாதுகாப்பு தேவையில்லை. தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சிகள் சேர்ந்துதான் உருவாக்கின. தற்போதுள்ள தேர்தல் விதிமுறைகள் மிகவும் சிறப்பானவைகள். இந்த விதிமுறைகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனையையும் அபராதத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று குரேஷி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்