முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்ற ஸ்டாலினின் கனவு எந்தக் காலத்திலும் நனவாகாது: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்ற ஸ்டாலின் கனவு எந்தக் காலத்திலும் நனவாகாது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவரின் குருபூஜை விழாவில் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தம் வாழ்நாளில் போராடி வெற்றி பெற்ற அய்யா  பி.கே. மூக்கையாத்தேவரின் 40-வது ஆண்டு நினைவு நாளை அவரது தியாகத்தை போற்றும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்த வந்தோம். பசும்பொன் தேவரும், பி.கே.மூக்கையாத் தேவரும் அண்ணன், தம்பிகளாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் நன்மைக்காக போராடி உரிமைகளை பெற்றுத் தந்து மாபெரும் தலைவர்காள புகழ் பெற்று உலகம் நிலைக்கும் வரை அவர்களின் புகழ் ஓங்கி நிற்கும் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவை வருமாறு:-

கேள்வி:- அடுத்து தி.மு.க.தான் வரும் என்றும், தொடர்ந்து 25 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் என்று கூறியுள்ளாரே?
பதில்:-  இந்த அரசியல் சூழ்நிலையில் கனவு உலகில் ஸ்டாலின் சஞ்சரித்து     கொண்டிருக்கிறார்.  தி.மு.க ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. ஸ்டாலினின் கனவு       எந்த காலத்திலும் நனவாகப் போவதும் இல்லை.   

கேள்வி:- புதிய ரேஷன் கார்டு திட்டம் பற்றி தங்களது கருத்து என்ன?
பதில்:- அதற்குரிய நீண்ட நெடிய உண்மை நிலவரத்தை உணவுத்துறை அமைச்சர்      காமராஜ் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.  இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.  தமிழகத்தை பொறுத்தவரை அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில்தான் அம்மா தமிழகத்தில் வாழும் அத்தனை ஏழை, எளிய மக்களுக்கும் இவ்வளவு உணவு பாதுகாப்பினை தந்த அம்மாவுடைய எண்ணத்தின் படியும், கொள்கையின் படியும் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் அம்மா ஆட்சியில் தொடர்ந்து நடக்கும்.  நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 

இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு சென்றவர்களுக்கு குடும்பஅட்டைகள் மூலம்      அங்கு பொருட்களை வாங்கவும், வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் இங்கு உணவு பொருட்கள் வாங்கும் அடிப்படையில் எந்த மாநிலத்திலும் சென்று பொருட்கள் வாங்கினாலும் அந்த மாநிலத்திற்கு தேவைப்படும் உணவை முழுமையாக மத்திய அரசு மானியமாக தந்து விடுகிறது

கேள்வி:-  ரஜினியின் புதிய கட்சி தொடர்பாக உங்கள் கருத்து?
பதில்:- ரஜினி சிறந்த நடிகர். அவர் நடிப்பை இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டில் உள்ள மக்களும் பாராட்டி வருகின்றனர். அவர் முழுமையாக அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தவுடன் எனது கருத்தை கூறுகிறேன்.

கேள்வி:-  முதலமைச்சரின் சுற்றுபயணம் எப்படி?
பதில்:-  முதலமைச்சர் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்து வருகிறது. அவர் வரும்  பொழுது உறுதியாக நல்ல பல திட்டங்களை கொண்டு வருவார். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

பேட்டியின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன்செல்லப்பா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப. ரவீந்திநாத்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பா.நீதிபதி, கே.மாணிக்கம், பெரியபுள்ளான் (எ)செல்வம், உட்பட பலர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து