முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது சீனா

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

நகர மேம்பாடு, உள்கட்டமைப்பை திட்டமிடுதல், வளங்களை ஆய்வு செய்வதற்கான 3 புதிய செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

சீனாவின் விண்வெளித்துறை சார்பில் சீன விண்வெளி தொழில்நுட்ப கழகம் தயாரித்த இசட்.ஒய். -1 02டி என்ற வளங்களை ஆராயும் செயற்கைக்கோள் நேற்று முன்தினம் விண்ணில் ஏவப்பட்டது. இது சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்ஷி மாகாணத்தின் தையுவான் விண்வெளி மையத்தில் இருந்து, லாங்மார்ச் 4 பி ராக்கெட் மூலம், நேற்று முன்தினம் முற்பகல் 11.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இத்துடன், பெய்ஜிங் பல்கலைக் கழகம் தயாரித்த 16 கிலோ எடை கொண்ட பி.என்.யூ-1, ஷாங்காய் தனியார் விண்வெளி தொழில்நுட்ப கல்லூரி தயாரித்தது உள்பட இரண்டு சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

இது பூமியில் இருந்து 778 கி.மீ. உயரத்தில் சூரிய சுற்று வட்டப்பாதையில் இயங்கும். இதில் அமைக்கப்பட்டுள்ள புற ஊதா கதிர்கள் கேமரா 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிய மற்றும் சிறிய நகரங்களை மிகத் துல்லியமாக படமெடுக்கும் வசதி கொண்டவை. இதன் மூலம் நகர மேம்பாடு, உள்கட்டமைப்பை மிக சிறந்த முறையில் திட்டமிடலாம். இதில் நிறுவப்பட்டுள்ள 166 அலை வரிசை கொண்ட அதிநவீன கேமரா ஒரே நேரத்தில் பல்வேறு நிறங்களில் 166 படங்களை எடுக்கும் திறன் மிக்கவை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கனிம வளங்கள், நீர் ஆதாரங்கள், சுற்று சூழல், பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர் ஆகியவற்றை இந்த செயற்கைகோள் கண்காணிக்கும். வளங்களை ஆராயும் இசட்.ஒய். -1 02டி செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டு எனவும் இரண்டு சிறிய ரக செயற்கைகோள்களின் ஆயுட்காலம் ஓராண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து