முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலு மீது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரில் புகார்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச், - 28 - சோனியா காந்தி அறிவித்த வேட்பாளரை போட்டியிடாமல் தடுக்க ரூ.50 லட்சத்தை தற்போது போட்டியிடும் வேட்பாளரிடம் பெற்று அறிவிக்கப்பட்ட வேட்பாளரிடம் ரூ.10 லட்சம்  கொடுத்து போட்டியிடாமல் தடுத்து விட்டதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தள்ளாடி தடுமாறி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் கூட்டணிக்குள் தொகுதி பிரிப்பதில் குத்துவெட்டு, தி.மு.க. ராஜினாமா பின்பு 63 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பதில் இழுபறி, கோஷ்டிகளுக்கு இடம் பிரிப்பதில் தங்கபாலு, வாசன், பா.சிதம்பரம் கோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதலால் வேட்பாளர் அறிவிப்பதில் பெரும் தாமதம் என தொடர்ந்தது. கடைசியில் மோதலில் தங்கபாலு வென்று வாசனுக்கு அடுத்து பெரும் அளவில் தனது கோஷ்டி ஆட்களுக்கு தொகுதிகளை பெற்றுக்கொடுத்தார். அதிலிருந்து பிரச்சினைகள் மேலும் பெரிதானது. 

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்கள், மறியல்கள், கொடும்பாவி எரிப்பு, தீக்குளிப்பு போன்ற தொடர்ச்சியான போராட்டங்களை காங்கிரஸ் தொண்டர்கள் தங்கபாலுவிற்கு எதிராக அரங்கேற்றினர்.

மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு தனது மனைவி ஜெயந்திக்கு சீட்டு வாங்கிக் கொடுத்தது எரிகிற தீயில் எண்ணையை வார்த்தது போல் தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தங்கபாலு வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள், மகளிர் அணியினர் தங்கபாலு உருவத்திற்கு செருப்பு மாலை போட்டு தீயிட்டு கொளுத்தினர்.

பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிர்பாக போட்டி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். சில தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றவேண்டும் என்று மேலிடத்திற்கு புகார்கள் அனுப்பப்பட்டன. கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஹசீனா சையத் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஹசீனா சையத்தை கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரசார் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சோனியாகாந்திக்கு வேட்பாளரை மாற்றவேண்டும் என்று புகார் அனுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக ஹசீனா சையத்திற்கு பதில் மக்பூல்ஜான் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் என்பதால் மக்பூல்ஜான் வேட்பு மனுதாக்கல் செய்யவருவார் என்று காங்கிரசார் எதிர் பார்த்தனர் ஆனால் கடைசி நேரம் வரை மக்பூல்ஜான் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் வேட்பாளர் கடத்தப்பட்டதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே நேற்று காங்கிரஸ் கட்சியின் சென்னை மாநகர 155-வது வட்ட கவுன்சிலரும், மகளிர் காங்கிரஸ் தலைவியுமான சாந்தி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தங்கபாலு மேலிடம் அறிவித்த வேட்பாளரை வேட்பு மனுதாக்கல் செய்யவிடாமல் தடுப்பதற்காக தற்போது உள்ள வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்று மேலிடம் அறிவித்த வேட்பாளர் மக்பூல்ஜானிடம் ரூ.10 லட்சத்தை அளித்து மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்து விட்டார் என்று உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்சியின் தலைவரை லஞ்சம் வாங்கியதாக அக்கட்சியில் உள்ள மகளிர் அணித் தலைவியே தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தது காங்கிரஸ் கட்சியில் மட்டுமே நடக்கும். இந்த புகாரை மறுத்துள்ள தங்கபாலு அவகாசம் இல்லாததால் உரிய ஆவணங்களை தயாரிக்க முடியாத காரணத்தினால் மக்பூல்ஜான் தேர்தலில் போட்டியிட வில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு நேர்மாறாக தற்போது உள்ள வேட்பாளர் ஹசீனா சையத் தங்கபாலு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்தனை குழப்பங்களுக்கும் காரணம் தங்கபாலு தான் என்று தெரிவித்துள்ள ஹசீனா சையத் நான் தங்கபாலுவின் ஆதரவாளர் என்பது போலவும், தங்கபாலுவின தொலைக்காட்சியில் அழகு கலை நிகழ்ச்சி நடத்துவதாகவும் பொய்யான செய்திகளை பரப்பியுள்ளார். நான் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். இளைஞர் காங்கிரசில் ஏராளமான உறுப்பினர்களை சேர்த்ததை பார்த்து ராகுல்காந்தி எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார். அதையும், தங்கபாலு கெடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கண்ட குழப்பத்தினால் தற்போது கிருஷ்ணகிரியின் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலிடம் அறிவித்த மக்பூல்ஜான் போட்டியிடாததால் ஹசீனா சையத் காங்கிரஸ் வேட்பாளராக நீடிப்பாரா? அல்லது போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள 8-க்கும் மேற்பட்ட காங்கிரசாரில் ஒருவரை மேலிடம் அறிவிக்குமா? என்பது கேள்விக்குறி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்