முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை தியாகராயர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: மணி அடித்து துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை தியாகராயர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி ரூ. 39.80 கோடி மதிப்பீட்டிலான நடைபாதை வளாகங்களையும் ரூ. 19.11 கோடி மதிப்பீட்டிலான சீர்மிகு சாலைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணி அடித்து தொடங்கிவைத்தார்.

சென்னை தியாகராயர் நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டு ரூ. 39.80 கோடியில் நடைபாதை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ. 19.11 கோடி மதிப்பீட்டில் 23 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தியாகராயர் நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 22 இடங்களில் இலவச வை -பையும்  தொடங்கப்பட்டுள்ளது. 5 இடங்களில் ஸ்மார்ட் பைக் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தியாகராயர் நகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தொடக்கத்திற்கான வண்ணமிகு விழா நேற்று மாலை பாண்டிபஜாரில் நடைபெற்றது.


நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோயில் மணி அடித்து நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சீரமைக்கப்பட்ட சாலைகளில் லேசர் நடனங்கள், வாணவேடிக்கைகளும் செய்து காண்பிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தது. இதைத்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட பணிகளை நடந்து சென்றும் பேட்டரி காரில் சென்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

 இதன் பின்னர்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சீர்மிகு நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் மூலமாக அற்புதமான,அழகான நடைபாதை ஏறக்குறைய ரூ.40 கோடியில் அமைக்கப்பட்டிருக்கின்றது.ரூ. 20 கோடியில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தப் பகுதிக்கு வருகிற பொதுமக்கள் எளிதாக சாலையில் பயணம் செய்ய முடியும். கடந்து செல்ல முடியும். ஒரு அழகான, உலகத் தரத்திற்கேற்றநடைபாதையும், சாலை அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: இத்திட்டத்தின் கீழ், மற்ற இடங்களில் பணிகள் எப்பொழுது முடிவடையும்?
பதில்: மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக பல்வேறுபணிகள் 11 நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி மேற்கொள்வதில் இந்தியாவில் 8 - வது இடத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்த சீர்மிகு நகரத் திட்டத்தின் மூலமாக இந்தச் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பப்பட்டு அற்புதமாக, உலகத்தரத்திற்கேற்றவாறு அமைக்கப்பட்டிருக்கின்றது. அனைத்து சாலைகளும் படிப்படியாகசீர் செய்யப்படும். அதற்கு போதிய நிதி ஆதாரத்தைத் திரட்டி படிப்படியாக மக்களுடையவசதிக்கேற்ப சென்னை மாநகரத்தில் சாலை வசதி செய்து கொடுக்க அரசு உரியநடவடிக்கை மேற்கொள்ளும்.,சென்னை மாநகரம் புதுப்பொலிவு பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார், செல்லூர் கே.ராஜூ துரைக்கண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து