முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் 1500 ஆண்டுகள் பழமையான மதுபான ஆலை

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றைத் தாங்கள் இஸ்ரேலில் கண்டறிந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வளாகம் ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

டெல் அவிவ் நகரில் இருந்து தெற்கே அமைந்துள்ள யாஃப் எனும் நகரில் பைசன்டைன் பேரரசின் ஆட்சிக் காலத்தில் இயங்கிவந்த இந்த வளாகத்தில், சாறு பிழிவதற்கான ஐந்து கட்டுமானங்கள் மண்ணுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் லிட்டர் ஒயின் தயாரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மிக நுட்பமான தயாரிப்பு பணிகள் முடிந்த பின்பு, இந்த வைன் மத்திய தரைக்கடல் பகுதியைச் சுற்றியுள்ள பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

___________________

ஈராக்கில் பார்லி. தேர்தல்: அல் ஸதர் கட்சி வெற்றி..!

ஈராக்கில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மதகுரு மொக்டடா அல் ஸதர்-ன் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2018-ல் 54 தொகுதிகளில் வென்ற அல்-ஸதர்-ன் கட்சி இந்த தேர்தலில் தலைநகர் பாக்தாத் உட்பட 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டி.வி மூலம் மக்களுக்கு உரையாற்றிய மொடாட அல்-ஸ்தர் வெளிநாடுகளின் எந்தவித தலையீடுகளும் இன்றி தேசியவாத சித்தாந்த கொள்கை கொண்ட ஆட்சி நடைபெறும் என தெரிவித்தார்.

_______________

பிலிப்பின்ஸில் வெள்ளம்: 9 பேர் பலி - 11 பேர் மாயம்

பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இந்த திடீர் மழைப்பொழிவால் வடக்கு பிலிப்பின்ஸானது கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. வெப்பமண்டல புயல் தென் சீனக் கடலில் காகயன் மாகாணத்திற்கு மேற்கே சுமார் 315 கிலோமீட்டர் தூரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் (62 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மழைவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெங்குவாட் பகுதியில் ஒரு காவலர் உள்பட 5 பேர் பலியாகினர். மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள நர்ரா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 4 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடும்வெள்ளம் காரணமாக 1600க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 புயல்கள் பிலிப்பின்ஸைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

_______________

ஜெஃப் பெசாஸை, பின்னுக்கு தள்ளிய ஸ்பேஸ்-எக்ஸ் ஓனர்

அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசாஸின் சொத்து மதிப்பை விட தன் சொத்து மதிப்பு அதிகம் என்பதை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க், சூசகமாக தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்-எக்ஸ்-ன் பங்கு மதிப்பு சென்ற வாரம் உச்சத்தை அடைந்த நிலையில், எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 222 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 

அமேசான் தலைவர் ஜெஃப் பெஸாசின் சொத்து மதிப்பு 190.8 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில், 1999ஆம் ஆண்டில் ஒரு பத்திரிக்கையில் அமேசான் தோல்வியடையும் என கூறி வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி டிவிட்டரில் ஒரு பதிவிட்ட ஜெஃப் பெசாஸ், கணிப்புகளை உடைத்து உலகின் மிக வெற்றிகரமான நிறுவனமாக அமேசான் உருவெடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பதில் பதிவிட்ட எலான் மஸ்க், ஒரு வெள்ளி பதக்க எமோஜியை பதிவிட்டுள்ளார்.

______________

அமேசான் ஊழியர்களுக்கு புதிய விதிமுறை அறிவிப்பு

அமேசான் நிறுவனத்தின் அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் வாரத்தில் எத்தனை நாள் அலுவலகம் வர வேண்டும் என்பதை அந்தந்த குழுவின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆண்டி ஜெஸி தெரிவித்துள்ளார். இதற்கு முன் வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்று இருந்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் முன்னதாக கொடுக்கப்படும் அறிவிப்பின் அடிப்படையில் குழுவின் ஆலோசனை கூட்டங்களில் நேரில் கலந்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், வீட்டில் இருந்து  வேலை செய்ய அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது. ஆண்டில் 4 வாரங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்த படி வேலை செய்ய அமேசான் அனுமதித்துள்ளது.

____________

சீனாவில் மழை - வெள்ளம்: பொதுமக்கள் 15 பேர் பலி

சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கே ஷாங்சி மாகாணத்தில் கடந்த 2ந்தேதி முதல் 7ந்தேதி வரையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால், மாகாணத்தின் 76 கவுன்டி பகுதிகள் பாதிக்கப்பட்டன.  17.6 லட்சம் பேர் மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  1 லட்சத்து 20 ஆயிரத்து 100 பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்த மழையால் 37 ஆயிரத்து 700 வீடுகள் கடுமையாக சேதமடைந்து உள்ளன.  2.38 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்தன.  இதனால், 78 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டது. சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் தொடர்ச்சியான மழை பொழிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.  3 பேர் காணாமல் போயுள்ளனர் என மாகாண அரசு தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து