முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரும்பின் ஆதார விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தலைப்புச் செய்தியாக கொடுக்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பு தி.மு.க. அரசினால் வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில் கரும்புக்கு டன்னுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. இந்த வகையில், நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது.

அந்த சமயத்தில்  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் விவசாயிகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் கேட்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டி, விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், அதனை எதிர்த்து தி.மு.க. போராட்டம் நடத்தும் என்று அறிவித்ததையும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டதையும் இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு 2,900 ரூபாய் என்று அறிவிப்பது என்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும். இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியான கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்பதையாவது நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று  அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து