முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரை வென்ற ஆஸ்திரேலியா

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2024      விளையாட்டு
Australia 2024-06-21

Source: provided

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இதில் முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 290 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னெர் 74 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 291 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நியூசிலாந்து 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 75 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

_______________________________________________________

பெயர் இல்லாததால் சர்ச்சை

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்பேன் டெஸ்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் விளையாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இந்த பட்டியலில் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கங்கள் வென்று சரித்திர சாதனை படைத்த மனு பாக்கரின் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மனு பாக்கர் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சகம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. இது தற்போது பலரது மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________

பி.வி.சிந்துவுக்கு திருமணம்

இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணமானது. ஹைதராபாத்தைச் சேர்ந்த போசிடெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்தார். இரு குடும்பத்தினரும் நீண்ட கால பழக்கமுடையவர்கள் என்றும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக இருவரின் திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் சிந்துவின் தந்தை ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற இருவரின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத், விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஐதராபாத்தின் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரம்மாண்டமாக நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் முக்கியப் பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தெலங்கானா அமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

_______________________________________________________

இந்திய அணிக்கு புஜாரா அறிவுரை

புஜாரா கூறியதாவது, இந்தத் தொடரில் ஸ்டார்க் அவர்களுடைய சிறந்த பவுலராக இருக்கிறார். கடந்த ஒன்றரை வருடங்களில் அவர் தனது பந்து வீச்சில் முன்னேற்றத்தை செய்துள்ளார். அவரிடம் ஏற்கனவே நிறைய திறமையும் இருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கடந்த 2 தொடர்களில் அவருக்கு எதிராக ரன்கள் குவிக்க முடியும் என்று நாங்கள் உணர்ந்தோம். ஆனால் தற்போது அவருடைய துல்லியம் முன்னேறியுள்ளது. சில சுமாரான பந்துகளை வீசினாலும் அவர் ஸ்டம்ப் லைனில் பெரும்பாலான பந்துகளை நல்ல லென்த்தில் போடுகிறார். 

அவருக்கு ஸ்விங் கிடைப்பதால் தற்போது மீண்டும் வித்தியாசமான பவுலராக வந்துள்ளார். அதனால் ஹேசல்வுட், பட் கமின்ஸ் ஆகியோரை விட அவர் மிகவும் ஆபத்தான பவுலராகவும் திகழ்கிறார். எனவே அவருக்கு எதிராக குறிப்பாக புதிய பதில் நாம் நன்றாக விளையாட வேண்டும். அவர் பெரும்பாலான விக்கெட்டுகளை முதல் 5 ஓவர்களில் தான் எடுத்துள்ளார். எனவே அந்த 5 ஓவர்கள் நாம் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அந்த இடத்தில் சமாளித்து அவரை 2, 3வது ஸ்பெல்லில் எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது அவர் களைப்பாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

_______________________________________________________

ரோகித்துக்கு ரவி சாஸ்திரி அறிவுரை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இணைந்து விளையாடுகிறார்கள். மனைவிக்கு குழந்தை பிறந்ததால் முதலாவது டெஸ்டை தவற விட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2-வது டெஸ்டுக்கு தான் திரும்பினார். வழக்கமான தொடக்க வரிசைக்கு பதிலாக தற்போது 6-வது பேட்டிங் வரிசையில் ஆடுகிறார். ஆனால் எதிர்பார்த்தபடி அவர் ஜொலிக்கவில்லை. இரு டெஸ்டில் வெறும் 19 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு சில யோசனையை வழங்கியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், 'ரோகித் சர்மா தனது யுக்திகளை சிறிது மாற்றிக்கொண்டு விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் 6-வது வரிசையிலும் அவரால் அபாயகரமான ஒரு பேட்ஸ்மேனாக செயல்பட முடியும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டும். கடந்த முறை அவர் களம் இறங்கிய போது தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதா? அல்லது தாக்குதல் பாணியை கடைபிடிப்பதா? என்ற குழப்பத்தில் இருந்தார். தடுப்பாட்ட மனநிலையை கைவிட்டு, அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். இதை செய்தால் அவர் பார்முக்கு திரும்புவதற்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் வழிவகுக்கும்' என்றார்.

_______________________________________________________

சாம் கான்ஸ்டாஸ் ஆர்வம்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் அறிமுகம் ஆன நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கான்ஸ்டாஸ் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதமடித்திருந்தார். அதன் காரணமாக அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பும்ரா குறித்து அதிகம் சிந்திக்க மாட்டேன் என்றும், அவரை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும்போது அவர் (பும்ரா) குறித்து நான் அதிகம் சிந்திக்க மாட்டேன். ஏனென்றால் அவரை நான் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை நானே சவால் செய்து நிச்சயமாக அவரை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். பொதுவாக எங்களது ஆய்வாளர்கள் எங்கள் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து சில ஒழுக்கங்களை ஆராய்வார்கள். எனவே அதில் மட்டும் நான் கவனம் செலுத்தி அவர் குறித்து சில விஷயங்களை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

_______________________________________________________

இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் (50 ஓவர்) தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 தொடரும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி டி20 தொடர் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. ஒருநாள் போட்டிகள் ஜனவரி 5, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த தொடர்களுக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்த தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா நீண்ட நாட்கள் கழித்து இடம்பெற்றுள்ளார். இலங்கை அணி விவரம் பின்வருமாறு:- சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னண்டோ, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசிதா பெர்னண்டோ, முகமது சிராஸ், லஹிரு குமரா மற்றும் எஷன் மலிங்கா.

_______________________________________________________

இங்கிலாந்து மகளிரணி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆஷஸ் தொடருக்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துவித போட்டிகளுக்கும் ஹீதர் நைட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது. ஜனவரி 2 ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணி ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

டி20 போட்டிகள் சிட்னி, கான்பெரா, அடிலெய்ட் மைதானங்களிலும், ஒருநாள் போட்டிகள் சிட்னி, மெல்போர்ன், ஹோபர்ட் ஆகிய மைதானங்களிலும் நடைபெறுகிறது. 4 நாள்கள் கொண்ட பகலிரவு டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. ஆல்-ரவுண்டர் ஃப்ரெயா கெம்ப், சுழற்பந்துவீச்சாளர் லின்சே ஸ்மித் மற்றும் விக்கெட் கீப்பர் - பேட்டர் பெஸ் ஹீத் ஆகியோர் முதல் முறையாக ஆஷஸ் தொடருக்கான அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் காயத்தால் விலகிய பந்துவீச்சாளர் மஹிகா கௌர் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து