முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிவாரி, மக்கள் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை கேட்பாரா அன்புமணி? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      தமிழகம்      அரசியல்
Sivashankar 2023-05-08

சென்னை, சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசைக் கேட்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? என அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து, தனது கூட்டணி பேரத்தை வலுப்படுத்த பேரம் பேசி வரும் ராமதாசும், அன்புமணி ராமதாசும் தற்போது அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள். இதோ மறுபடியும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினை அரசியல் சூதில் பணயம் வைத்து, தனது அரசியல் பேரத்தை வலுப்படுத்த துடிக்கிறார்கள். ஆனால், அவர்களை நம்பி என்றும் ஏமாறப்போவதில்லை என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே மக்கள் அவர்கள் முகத்தில் அடித்தாற்போல் தெரிவித்துவிட்டனர்.

எங்களது பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனைக் குறிப்பிட்டு, வன்னியர் சமூக மக்கள் மீது தங்களுக்குப் பாசம் உள்ளது போல நீலிக்கண்ணீர் வடித்து நடித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ். கூட்டணிக் கட்சியிடம் பிளஸ் 1 என்ற மாநிலங்களவை சீட் ஒப்பந்தம் போட்டு அந்த சீட்டை அன்புமணிக்கு மட்டுமே தாரை வார்ப்பார்கள். ஒன்றிய அமைச்சர் பதவி என்றாலும் அதனையும் தன் மகன் அன்புமணிக்குத்தான் வாங்கிக் கொடுப்பாரா ராமதாஸ்? இதுதான் ராமதாஸ் வன்னியர் பாசமா? என்று நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?

பாமகவிற்காக அன்றுதொட்டு இன்றுவரை உழைத்து வரும் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி போன்ற எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தும் அன்புமணி ராமதாஸை அடுத்த தலைவராக்கியது எதனால்? தலைவர் பதவியில் இருந்த தீரன் எங்கே போனார்? ஜி.கே.மணி வகித்த தலைவர் பதவியை எதற்காக பிடுங்கி அன்புமணிக்கு கொடுத்தார்கள்? பாமக வில் வேறெவருமே அன்புமணி அளவிற்கு உழைக்கவில்லையா? என்று நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்? பாமகவிற்காக உழைத்து ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவைக் கூட இறுதி காலத்தில் கைவிட்ட உங்களுக்கு வன்னியர் பாசம் பற்றி எல்லாம் பேச தகுதி உண்டா? அவரது குடும்பத்தின் இன்றைய நிலை என்ன?

வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுகவை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார் அன்புமணி. அதற்கு முன்பு இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு அன்புமணி பேசுவாரா? பொய்க்கால் குதிரை ஓட்டி நானும் வன்னிய மக்களை காக்கும் ராஜாதான் என வாய் வேடம் போட்டால் எத்தனை காலத்துக்குத்தான் வன்னிய மக்கள் நம்புவார்கள்?

சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்லாது வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பையே எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ள பாஜகவை ஆதரித்து அவர்களோடு கூட்டணியில் இருக்கும் அன்புமணி, தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பேசி வருவது அரசியல் ஆதாயத்திற்காக அன்றி வேறென்ன. மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசு மேற்கொள்வது. அதைத்தான் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பாக நீதிமன்றங்களோ இன்னபிற ஒன்றிய அரசு அமைப்புகளோ அங்கீகரிக்கும், மாறாக மாநில அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது அது வெறுமனே கணக்கெடுப்பாக இருக்குமே தவிர அதனால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

அன்புமணி ராமதாசுக்கு உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அவர் கை குலுக்கி உறவாடி கூட்டணியில் இருக்கும் மத்திய பாஜக அரசை பணியவைத்து, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஆனால், அதற்கு தைரியம் வேண்டும். தைலாபுரம் பயிலரங்கத்தில் சொல்லி தர மாட்டார்களா? மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என மோடி அரசை கேட்பீர்களா? அதை எல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்!' இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து