முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதல் சம்பவம் போன்று எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1 2023-11-18

Source: provided

சென்னை : பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடும் கண்டனம்...

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.23) பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (நேற்று முன்தினம்) நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் இப்பேரவையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடும் அதிர்ச்சி, துயரம்...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான ஒரு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இதில் இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட தகவல் நமக்கெல்லாம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.

கொடூரமான தாக்குதல்...

அங்கு பைசாரன் என்ற மலைப்பகுதியில் இருந்து திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று அம்மாநில முதல்ர் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

இரும்புக்கரம் கொண்டு... 

இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு எத்தகைய மோசமான, கொடூரமான, பயங்கரமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஆகும். பயங்கரவாத - தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்தத் தாக்குதலில் இதுவரை மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

தமிழர்கள் பாதிப்பு...

இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற தகவல் எனக்குக் கிடைத்தவுடன் உடனடியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையம் தொடங்குவதற்கு உத்தரவிட்டேன். இச்சம்பவம் குறித்து பொது மக்கள் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிய உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300, 9289516712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உரிய உதவிகளை...

மேலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையரை இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டேன். காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவியைச் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஆட்சியரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

பத்திரமாக அழைத்து.... 

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனச்சாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 2017-ம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2 நிமி மவுன அஞ்சலி...

மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிட மவுன அஞ்சலியைச் செலுத்த கோருகிறேன், என்றார். முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்துக் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து உரையாற்றினர்.

நிகழாமல் தடுத்திட...

பின்னர் மீண்டும் பேசிய முதல்வர் ஸ்டாலின், “காஷ்மீரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். நமது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய இந்தக் கொடூரமான சம்பவத்திலே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென்று இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிற நேரத்தில் தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள் என்று உறுதியை உங்கள் அனைவரின் சார்பிலும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து