முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேது சமுத்திர திட்டம் கருணாநிதிக்கு அட்ஷயபாத்திரம்: முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.21 - சேது சமுத்திர திட்டம் கருணாநிதி குடும்பத்திற்கு அட்ஷயபாத்திரம் என்று வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதா கிண்டல் அடித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் பேசியதாவது:_

தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு முடக்கி விட்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட தி.மு.க_வினர் அனைவரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

மக்கள் நலத் திட்டங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு முடக்கவில்லை. மாறாக, தி.மு.க_வின் தன்னலத் திட்டங்களைத் தான் நாங்கள் முடக்கி இருக்கிறோம்.

உதாரணமாக, <ரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் திட்டம் தி.மு.க.வால் கொண்டு வரப்பட்டது. அதனை நாங்கள் முடக்கி வைத்தோம். ஏனெனில், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம். தி.மு.க. தலைமைக்கு கமிஷன் பெற்றுத் தரும் திட்டம். 

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க. இதில் முக்கியப் பங்கு வகித்தவர் தி.மு.க_வைச் சேர்ந்த டி.ஆர். பாலு. இதனை நாங்கள் எதிர்த்தோம்; நாங்கள் முடக்கி வைத்தோம். ஏனென்றால், விளை நிலங்களை பாலைவனங்களாக மாற்றும் திட்டம் மீத்தேன் எரிவாயு திட்டம். ஆனால் இது, தி.மு.க_வினரின் சட்கேசுகளை நிரப்பும் திட்டம். 

தென் மாநில மீனவர்களின் வாழ்வாதாரங்களை ஒட்டுமொத்தமாக அழிக்கக் கூடியதும், சுற்றுச்சழலை சீரழிக்கக் கூடியதுமான சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் தி.மு.க.வின் தூண்டுதல் காரணமாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. ஏனெனில், இந்தத் திட்டத்தினால் பாதிக்கப்படக் கூடியவர்கள் மீனவர்கள். 

தூத்துக்குடி அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி எடுத்து செல்லும் தமிழக அரசின் கப்பல்கள் கூட செல்ல முடியாத அழிவுத் திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம். ஆனால், இந்தத் திட்டம் . கருணாநிதி குடும்பத்திற்கு அட்சய பாத்திரம். சேது சமுத்திரத் திட்டத்தில் என்னென்ன தவறுகள் நடந்துள்ளன என்பதும், தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் மூலம் எவ்வளவு பணத்தை டி.ஆர்.பாலு கொள்ளை அடித்தார் என்பதும் தனக்குத் தெரியும் என்று மு.க.அழகிரியே சமீபத்தில் நாகர்கோயிலில் பேசி உள்ளாரே? இதற்கு என்ன பதில் என்பதை கருணாநிதி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். 

மதுரவாயல் _ சென்னை துறைமுக உயர்மட்ட சாலை திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை.  

இதில் சில மாற்றங்களை ஒரு சில இடங்களில் மட்டும் செய்ய வேண்டும் என்று தான் கோருகிறோம். கூவம் ஆற்றின் நடுவில் தூண்களை அமைக்காமல், ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி கரையில் தூண்களை அமைக்கும்படி நாங்கள் சொல்கிறோம். நாங்கள் சொல்வது போல் செய்தால், பெருமழை பெய்யும் போது சென்னை நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் தடுக்கப்படும். இதனை ஏன் செய்ய மறுக்கிறார்கள்? 

மக்கள் நலத் திட்டமாக இருந்தால் அதனைச் செயல்படுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில், தன்னலத் திட்டமாக, மக்கள் விரோதத் திட்டமாக இருந்தால் அதனை முடக்கி வைக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்