முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவ விழா: அறைகள் முன்பதிவு ரத்து

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, செப்.04 - திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு அறைகள் முன்பதிவை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் 26-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழாவையொட்டி, தங்கும் அறைகள், போக்குவரத்து, அன்னபிரசாதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளில் எந்த குறைகளும் ஏற்படாதவாறு திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். திருமலையில் 6,675 தங்கும் விடுதிகள் உள்ளன. திருமலையில் உள்ள விடுதிகள், சொகுசு வாடகை விடுதிகள், சத்திரங்களில் தினமும் சுமார் 50,000 பக்தர்கள் தங்க முடியும். இந்த விடுதிகளில் ரூ. 50 முதல் ரூ. 7,000 வரை ஒருநாள் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதில், ரூ.50 முதல் ரூ. 750 கட்டணத்தில் மொத்தம் 5,600 அறைகள் உள்ளன. மேலும், ரூ.1000 முதல் ரூ. 7,000 கட்டணம் வரை சுமார் ஆயிரம் அறைகள் உள்ளன.

பிரம்மோற்சவ விழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்பதால் இம்மாதம் 25-ம் தேதி முதல் அறைகள் முன்பதிவை தேவஸ்தானம் ரத்து செய்தது. இதுதவிர, அறைகளுக்கு நன்கொடை வழங்கிய பக்தர்கள், நேரடியாக திருமலைக்கு வந்தால் மட்டுமே அவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும் என்றும், அவர்களது சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும் தேவஸ்தானம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மாடவீதிகளில் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனையொட்டி பெரிய, சின்ன சேஷ வாகனங்கள், சூரியபிரபை, சந்திர பிரபை, சிம்மம், குதிரை, அன்னம், கற்ப விருட்ஷம், கருடன், அனுமன் வாகனங்களுக்கு மராமத்து செய்து தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.

மேலும் முத்து பல்லக்கு, மோகினி அவதார பல்லக்குகளுக்கும் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்