முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை தொழில் அதிபர்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வர வேண்டும்: அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

தமிழக அரசின் ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்னும் செயல் திட்டத்தில், கோவை தொழில் அதிபர்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று, கோவையில் நடந்த தொழில் அதிபர்கள் சந்திப்பு கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.

சென்னையில், வருகின்ற மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக முதலீட்டாளர்களை கவர்ந்திடும் வகையில், தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு- 2015 என்ற நிகழ்ச்சி, கோவை தாஜ் விவாண்டா ஹோட்டல் வளாகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில், தொழில் துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கி பேசியதாவது:-

ஜெயலலிதாவின் வழிகாட்டுதலி ன்படி, மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில், சென்னையில் நடக்கும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடை பெறுகிறது. தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும், விரைவாக வழங்குவதற்காக, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. மின்பற்றாக்குறை ஏற்பட்ட காலத்தில், ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, தமிழக அரசு ரூ.90 கோடி செலவில் வரிச்சலுகை அளித்து, முதலீட்டாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

2011-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இன்று வரை ரூ.2,52,000 கோடி அளவிற்கு கூடுதலாக தமிழக அரசு முதலீடுகளை கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 7.29 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியான 4.74 சதவீதத்தைவிட கூடுதலாகும்.

பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தொழில் தொடங்க அழைப்புகள் வந்த போதெல்லாம், அழைப்புகளை நிராகரித்து, தமிழகத்தில் தொடர்ந்து தொழில் செய்து வரும் தொழில் அதிபர்களை, தமிழக அரசு பாராட்டுகிறது. தொழில் அதிபர்களுக்கு எந்தவிதத்திலும் தடையாக இல்லாமல், படிக்கற்களாக தொடர்ந்து இந்த அரசு செயல்படும்.

பிற மாநிலங்களில் தொழில் முனைவோர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படாததாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளாலும் தொடர்ந்து தொழில் செய்ய இயலாமல் நலிவடைந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்லமுறையில் இருப்பதால், தொழில் செய்ய சிறப்பான சூழ்நிலை உள்ளது.

திருப்பூரில் சாயப்பட்டறை பிரச்சினைக்கு தீர்வுகாண, ரூ.200 கோடிக்கு வட்டியில்லா கடன் வழங்கி, தொடர்ந்து தொழில் செய்ய ஆதரவு கரம் நீட்டியதன் காரணமாக, ரூ.21 ஆயிரம் கோடி பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் நடைபெற உள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், கோவை தொழில் அதிபர்கள் அதிகளவில் கலந்து கொண்டு, முதலீடு செய்ய வேண்டும்.

தமிழக அரசின் ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்னும் செயல் திட்டத்தில் கோவை தொழில் அதிபர்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய செயல் வடிவம் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாநகரில், தொடர்ந்து தொழில் செய்திடும் வகையிலும், தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கிடும் வகையிலும், தமிழக அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் காந்திபுரம் மேம்பாலப் பணிகள், ஒருங்கிணைந்த பஸ் நிலையம், லாரிப்பேட்டை போன்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா தான் மின்சார பற்றாக்குறை பிரச்சினையை தீர்த்து வைத்தார். அதை போல தொழில் துறையில் உள்ள மற்ற பிரச்சினைகளையும் அவர் தீர்த்து வைப்பார். தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமை செயலர் (தொழில்துறை) சி.வி.சங்கர், கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவர் ராஜஸ்ரீ பதி, கோவை மண்டலத் தலைவர் சீனிவாசன், துணை தலைவர் நேத்ரா ஜே.எஸ்.குமார், இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ரவிசாம், கோவை மண்டல கூட்டமைப்பு தலைவர் கே.இளங்கோ உட்பட தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து