முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்கள் உன்னதமான தலைமுறையை உருவாக்கும் சமுதாயச் சிற்பிகள்-சேதுராமன்

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, செப்.- 5 - சமுதாயத்தின் தூண்களாக பத்திரிகைகள் திகழ்வதைப்போல் சமுதாய சிற்பிகளாக திகழ்பவர்கள் ஆசிரியப் பெருமக்கள் ஆவார்கள் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ந.சேதுராமன் தமது ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில், ஒரு டாக்டர் தவறு செய்தால் ஒரு நோயாளி மட்டும்தான் பாதிப்படைவார், ஒரு பொறியாளர் தவறு செய்தால் கட்டிடம் இடிந்து சில பேர் மட்டும் பாதிப்படைவார்கள். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் ஒட்டுமொத்த சமுதாயமே பாதிப்படையும் என்பது உறுதி. எனவே நல்ல சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களால்தான் ஒரு நாடு அனைத்து துறையிலும் வல்லமையான நாடாக, சான்றோர்கள் நிறைந்த நாடாக, உலகின் உன்னத நாடாக உருவாக முடியும். நல்ல சமுதாயத்தினை, நாட்டுப் பற்றுள்ள சமுதாயத்தினை, ஒழுக்கமுள்ள சமுதாயத்தினை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே. இத்தகைய உயர்ந்த சிந்தனைக்கு சொந்தக்காரர்களான ஆசிரியர்களை உன்னதமான சமுதாயத்தை உருவாக்கும் சமுதாய சிற்பிகள் என்று கூறுவது சாலப் பொருத்தமானது. இத்தகைய புரட்சியை விதைக்கும் புத்துலக சிற்பிகளாக ஆசிரியப் பெருமக்கள் திகழ்கிறார்கள். அறிவுத் தெய்வங்களாக விளங்கும் ஆசிரியப் பெருமக்களைப் போற்றும் வகையில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக போற்றப்படுகிறது.
இங்கு நான் மருத்துவமனை நிர்வாகியாகவும், பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வந்தாலும், மதுரை மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியதையே பெருமையாக எண்ணுகிறேன். எனவேதான் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆசிரியர்களை போற்றுவதிலும் அவர்கள் நலனை பேணுவதிலும் எப்போதும் முன்னிற்கிறது. இங்கு சிகிச்சை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு( ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உட்பட)மற்றும் மாணவர்களுக்கும் மருத்துவச் சலுகையாக செலவில் பத்து சதவீதம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நன்னாளில் வலிமையான பாரதத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு இன்னும் வளமான நன்மைகளைச் செய்வதிலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பதிலும் என்னாளும் எங்கள் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி முன்னிற்கும் என்று உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்