முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரிய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதை ரஷ்யா மறு ஆய்வு செய்ய வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - சிரிய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதை ரஷ்யா மறு ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

7-வது ஆண்டாக ....
சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7-வது ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3.5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் போரின்போது சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது. உள்நாட்டு எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன.

சிரியா மறுப்பு
இதை சிரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கு குளோரின் வாயு தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அங்கு இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் சற்று தாழ்வாக பறந்து வி‌ஷ வாயு தாக்குதல் நடத்தின. இந்த வி‌ஷ வாயு தாக்குதலில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி பிணங்களாகினர். 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். குழந்தைகள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தாக்குதலுக்கு சிரிய மற்றும் ரஷிய ராணுவம் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது, ஆனால் இருதரப்பு மறுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்கா எச்சரிக்கை
விஷவாயு தாக்குதலை அடுத்து சிரியாவில் உள்ள ஆசாத் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதை ரஷ்யா மறு ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் ஒபாமா அரசு இருந்தபோதும் ரஷ்யாவின் நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என கூறி அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்கள் மீதும் ரஷிய ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தி வருகிறது, ஐ.நா., மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்தும் ரஷ்யா தனது போக்கை மாற்றவில்லை மாறாக கிளர்ச்சியாளர்கள் மீது குற்றம் சாட்டுகிறது.

வெளியுறவுத் துறை அமைச்சர் ...
அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பேசுகையில் சிரியாவில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு அந்நாட்டின் ஆசாத் அரசுதான் காரணம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் துளி அளவுகூட மாற்றம் கிடையாது. இப்போது சிரியாவில் ஆசாத் அரசுக்கு தொடர்ச்சியாக ஆதரவு தரவேண்டுமா என்பது குறித்து ரஷ்யா மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இதுவாகும் என கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்