முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

குடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் சச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து புயலாக மாறும் போது, அந்த திருமண பந்தமே முறியும் அளவிற்கு போய் நிற்கக்கூடும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றால், விவாகரத்து சம்பந்தமாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவாகரத்தையும், அதனால் ஏற்படும் மன வலியையும் தடுக்க ஏராளமான வழிகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், அவை உடையாமல் தீர்வு காண வேண்டும். எந்த ஒரு தம்பதியினரானாலும் சரி, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த கருத்து வேறுபாட்டை எப்படி சரி செய்வது என்பதை பார்க்க வேண்டுமே தவிர, விவாகரத்தைப் பற்றி யோசிக்கக் கூடாது. எந்த தம்பதிகள் தங்கள் உறவை பாதுகாக்க சோர்வு இல்லாமல் பாடுபடுகிறார்களோ, அவர்களின் உறவே நிலைத்து நிற்கும். இப்போது திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சரிசெய்து, விவாகரத்தை தடுக்கும் சில வழிகளைப் பார்க்கலாம்.

கருத்து வேறுபாடு :  தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டிற்கான காரணத்தை அல்லது இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். பிரச்சனை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, நம் கையை மீறி புயலாக வளரும் முன், பேசி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். குறிப்பாக, திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கண்டிப்பாக வேண்டும்.

நேரம் :  திருமணம் நடந்து 40-50 ஆண்டுகள் கழிந்தும், ஒற்றுமையுடன் வாழும் தம்பதிகளை காண்கிறோம். அப்படிபட்ட தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழும் இரகசியம் என்னெவென்று தெரியுமா? திருமண வாழ்க்கையில் இருவரும் ஒன்றாக போதிய அளவு நேரத்தை செலவிட்டதே அகும். அதனால் தேவையான அளவு நேரத்தை திருமண வாழ்க்கையில் முதலீடு செய்தால், திருமண வாழ்க்கையில் சந்தோஷம் (லாபம்) செழித்து இருக்கும்.

தேவையற்ற பழக்கம் :  மனைவியை விட்டு அதிக நேரம் பிரிந்து இருக்கிறீர்களா? அதிக நேரம் நண்பர்கள் மேல் கவனம் இருப்பதால், மனைவியை கவனிப்பதில்லையா? இவை எல்லாம் தேவையற்ற பழக்கத்தின் சில உதாரணங்கள். இது உங்கள் உறவில் தெரிந்தோ தெரியாமலோ விரிசலை உண்டாக்கும். எனவே இவ்வகை பழக்கங்களை கண்டறிந்து உடனே தவிர்க்க வேண்டும். இல்லையெனில் திருமணம் பந்தம் உடைந்துவிடும்.

காதல் வாழ்க்கை :  திருமண வாழ்க்கை சரியான பாதையில் பயணிக்க காதல் மிகவும் அவசியம். திருமணத்திற்கு முன், உங்கள் மனைவியை காதலித்த போது, உங்களிடம் அவர் ரசித்த விஷயங்களை நினைவு கூர்ந்து, அதை போல் மீண்டும் காதலித்து அன்பை வெளிக்காட்டலாம். இது இருவரின் திருமண மன உளைச்சலை நீக்கி, சந்தோஷத்தை உண்டாக்கும்.

குறைகள் :  யாருமே முழு நிறைவான மனிதராக இருக்க வாய்ப்பில்லை. அதனை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். எனவே மனைவியை குறை கூறுவதை நிறுத்தி விட்டு, உங்களிடமும் சில தவறுகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு புரிந்து உங்களிடம் இருக்கும் குறைகளை திருத்துவதற்கு முயற்சி செய்தால், மனைவியும் திருந்திவிடுவார்கள்.

மன்னிக்கும் பண்பு :  மனைவி அல்லது கணவன் செய்யும் தவறை முழு மனதுடன் மன்னிக்கும் பக்குவம் இருக்க வேண்டும். இத்தகைய மன்னிக்கும் பண்புடன் திருமண வாழ்க்கையை நடத்தினால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து