முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி மன்னருடன் அருண் ஜெட்லி சந்திப்பு இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

ரியாத்: இரு நாள் பயணமாக சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அந்த நாட்டின் மன்னர் சல்மானை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ரியாத்தில் உள்ள மன்னரின் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இந்தியா-சவூதி அரேபியா இடையே பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சார்பில் மன்னருக்கு அருண்ஜெட்லி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

12-ஆவது இந்தியா-சவூதி அரேபியா கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ள அருண்ஜெட்லி, சவூதி அரேபியாவைச் சேர்ந்த முக்கியத் தொழிலதிபர்களை சந்தித்தார். இது தொடர்பாக சவூதி அரேபிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்திய நிதியமைச்சரின் சவூதி பயணம், இருநாடுகள் இடையே தொழில், வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் அமைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சவூதி அரேபிய தொழில், எரிசக்தி, தாது வளத்துறை அமைச்சர் காலித் பின் அப்துல்லாசிஸ் அல்-ஃபாலிக், நிதியமைச்சர் முகமது பின் அப்துல்லா அல்-ஜாதான் ஆகியோரையும் அருண் ஜெட்லி சந்தித்தார்.

இந்தியா அதிக அளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா 4-ஆவது இடத்தில் உள்ளது. இது தவிர இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதிலும் அந்நாடு முக்கியப் பங்காற்றுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி, சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து