முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா - இந்தியா கூட்டு நிறுவனம் மூலம் 140 ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்ய தும்கூரில் இடம் தேர்வு

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ரஷ்யா - இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ரக போர் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க பெங்களூரு அருகே தும்கூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அக்டோபருக்குள் முடியும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக ஆயுதங்களை ரஷ்யா சப்ளை செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக ரஷ்யாவிடம் இருந்து 200 கமோவ் ரக அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முடிவெடுத்தது. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற போது, இதுதொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ரஷ்ய ஹெலிகாப்டர்ஸ் நிறுவனமும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து கமோவ் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. மொத்தம் 200 ஹெலிகாப்டர்களில் முதல் கட்டமாக 60 ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்கும். மீதமுள்ள 140 ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

இதற்காக பெங்களூரு அருகில் உள்ள தும்கூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் தயாரிப்பது மட்டுமன்றி அதற்கான தொழில்நுட்பங்களையும் இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்கான நிதியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒதுக்கி அனுமதியும் அளித்துவிட்டது.

இதையடுத்து இந்தியாவில் கமோவ் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இறுதி முடிவு அக்டோபருக்குள் எடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கமோவ் ரக ஹெலிகாப்டர்களை தாக்குதல் உட்பட பல வகையில் பயன்படுத்த முடியும்.

தற்போது சீட்டா மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்களை இந்தியா பயன்படுத்தி வருகிறது. அவை மிகவும் பழையதாகி விட்டதால், புதிதாக அதிநவீன ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று ராணுவமும் விமானப் படையும் வலியுறுத்தி வந்தன. அதன்படி கமோவ் ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து