முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிப்பது அவசியம்: பிரதமர் மோடி

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் டிஜிட்டல் துறை உள்கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிப்பது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 3 நாள்கள் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு நிறைவடைந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பொருளாதாரரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் அனைத்து துறைகள், சேவைகளில் மின்னணுமயமாக்கல் மிகவும் அவசியம். எனவே, மின்னணுமயமாக்கல் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், அதுசார்ந்த திறன்களை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும்.

முக்கியமாக செயற்கை நுண்ணறிவு, தகவல் ஆய்வு உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இப்போது நாம் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் காலகட்டத்தில் உள்ளோம். இதற்காக தகவல் தொழில்நுட்பத்துறை புரட்சி மற்றும் டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சிக்கு நாம் நன்றி கூற வேண்டும். இதன் மூலம் நமக்கு புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் நாம் அத்துறை சார்ந்த பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காகவே அத்துறைகளை மேம்படுத்த முதலீட்டை நாம் அதிகரிக்க வேண்டியுள்ளது.

வரலாற்றுக் காலம் தொட்டே இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையே சிறந்த உறவு இருந்து வந்துள்ளது. இப்போது இந்தியாவுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட முறை இருதரப்பு தலைவர்கள், அதிகாரிகள் நிலையில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதிலும் அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதிலும் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா சார்பில் 11 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.75,000 கோடி) கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் கடந்த 30 ஆண்டுகளில் பல லட்சம் ஆப்பிரிக்க மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகமயமாக்கலின் பயன்கள் அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், சில நாடுகள் தங்கள் நலன்களை மட்டும் பாதுகாக்கும் கொள்கையைக் கடைப்படிக்கின்றன. இது உலகமயமாதலுக்கு எதிரானது என்றார் மோடி.

சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, பிரேஸில் அதிபர் மிஷெல் டிம்பர் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இது தொடர்பான சுட்டுரையில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ரஷிய அதிபர் புதினை சந்தித்துப் பேசியது மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது. இந்தியா-ரஷியா இடையிலான நட்புறவு மிகவும் ஆழமானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும்' என்று தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் மூன்றாவது முறையாக புதினை மோடி சந்தித்துள்ளார். கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்தனர். அதற்கு முன்பு மே மாதம் ரஷியாவின் சோச்சி நகரில் புதின்- மோடி சந்திப்பு நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து