முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பெண் ஊழியர்களுக்கு 3-வது மகப்பேறு விடுப்பு சலுகை ரத்து - உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

டேராடூன் : அரசாங்கத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள மகப்பேறு விடுப்புச் சலுகையை ரத்து செய்து உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் ஹல்ட்வானியை சேர்ந்த செவிலியர் ஊர்மிளா மாசி என்பவர் மூன்றாவது குழந்தையின் போது பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கக் கோரி பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மூன்றாவது குழந்தையின் போது பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படக் கூடாது என்ற அரசாங்க விதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இம்மனுவை ஜூலை 2018-ல் ஒற்றை அமர்வில் விசாரித்த நீதிபதி ராஜீவ் சர்மா மனுவை ஏற்றுக் கொண்டு அரசு ஊழியர்களின் மூன்றாவது மகப்பேறு விடுப்புக் கோரிக்கை ஏற்கப்பட்டதாக கூறி அதற்கான சலுகையை வழங்க உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து உத்தரகாண்ட் மாநில அரசு சிறப்பு மேல்முறையீட்டைத் தாக்கல் செய்தது. அதற்கான விசாரணை கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பில், மனுதாரருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருந்ததால் மகப்பேறு சட்டத்தின் பலன்களைக் கோர முடியாது என கூறப்பட்டது. மேலும் அடிப்படை விதி 153-ன் இரண்டாவது பிரிவின்படி அவரது மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க இடமில்லை என்றும் அரசுத் தரப்பின் சிறப்பு மேல்முறையீட்டு மனு சார்பாக வாதிடப்பட்டது.

மூன்றாவது குழந்தை பிறந்தால் மகப்பேறு சலுகைகளை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பின் 42-வது பிரிவையும், மகப்பேறு நன்மைச் சட்டத்தின் பிரிவு 27-ஐயும் மீறுவதாக சட்டங்களை மேற்கோள்காட்டி அரசுத் தரப்பு தெரிவித்தது. சிறப்பு மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் மற்றும் நீதிபதி அலோக் குமார் வர்மா ஆகியோர் அடங்கிய இரட்டை அமர்வு பொதுநலவழக்கின் மனு மீது அளித்த ஒற்றை அமர்வு நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதன்படி அரசாங்கத்தில் பணிபுரியும் பெண்கள் மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்புச் சலுகை வழங்கப்பட இயலாது என தீர்ப்பு அளித்தனர்.

உத்தரப் பிரதேச அடிப்படை விதிகளை உத்தரகாண்ட் மாநிலம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி உ.பி.யின் நிதி கையேட்டின் அடிப்படை விதி 153-ன் இரண்டாவது விதியின்படி, மூன்றாவது குழந்தைக்கு பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து