முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி எடுப்பதால் மலட்டுத்தன்மைக்கு வாய்ப்பில்லை : அமெரிக்க ஆய்வுத் தகவல்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால் மலட்டுத் தன்மை ஏற்படாது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்ற வதந்தி தடுப்பூசி அறிமுகமானதிலிருந்தே பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதனால் மலட்டுத் தன்மை ஏற்படாது என மத்திய அரசு ஏற்கெனவே கடந்தாண்டு விளக்கமளித்தது.

இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. கொரோனா தடுப்பூசிக்கும் கருவுறுதல் மற்றும் கருத்தரித்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. 

எனினும், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மட்டும் குறுகிய காலத்துக்கு குழந்தை பிறப்புக்கான திறன் குறைவாக இருக்கலாம் என்பதும், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அதையும்கூட கடந்துவிடலாம் என்பதும் பாஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஃபைசர்- பயோடெக், மாடர்னா அல்லது ஜான்சன் மற்றும் ஜான்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட இணையர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

ஆய்வை முன்னின்று நடத்தி முடித்த பாஸ்டன் பல்கலைக்கழக தொற்று நோயியல் துறை பேராசிரியர் மருத்துவர் அமெலியா வீஸ்லிங்க் கூறுகையில், "குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வயதில் இருக்கும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பதற்கு மலட்டுத் தன்மையைக் காரணமாக முன்வைக்கின்றனர். 

இணையரில் எவரேனும் ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அதற்கும் கருவுறுத்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை முதன்முறையாக எங்கள் ஆய்வு கூறுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், செலுத்திக்கொள்ளவில்லை என்றாலும், கருத்தரித்தலில் எவ்வித மாற்றமும் இருக்காது" என்றார்.

இதுபற்றி பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் துறைப் பேராசிரியர் மருத்துவர் லாரென் வைஸ் கூறுகையில், "இணையரில் எவரேனும் ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும், அதனால் குழந்தை பிறப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதற்கான மற்றுமோர் ஆதாரத்தை இந்தத் தரவு உறுதிப்படுத்துகிறது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து