முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      உலகம்
Dubai 2024-04-17

Source: provided

துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன.  வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  

இதனால், சாலைகளில் நீர் தேங்கியது.  பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.  மாலையில் 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று முன்தினம் பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டது.  எண்ணற்ற விமானங்கள் காலதாமதத்துடனும், ரத்து செய்யப்பட்டும் இருந்தன.  இது விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின.  விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.  விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

இதே போன்று, துபாயில் உள்ள துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது.  துபாயின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்திருந்தது.  சாலைகள், குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின.  

பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது.ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால், அமீரகத்தில் உள்ள பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன.  

துபாய் மட்டுமின்றி பக்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது.  ஓமன் நாட்டில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.  தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து