முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழை, எளிய மக்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம், கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 11-ம் தேதி பதில் அளித்தார். அதில் மொத்தம் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த 2025-2026-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்வார்கள்.

இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில், தமிழக அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் தரப்படும்.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான். அதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக முதல்வர் ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறார். அந்த புரட்சி என்னவென்று சொன்னால், சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெறமுடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யமுடியாமல் இருப்பதும் நம்முடைய முதல்வர் கவனத்திற்கு சென்றதன் விளைவாக அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னையை சுற்றியிருக்கக்கூடிய அந்த நான்கு மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதல்வர் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்.

முடிவு செய்த நேரத்தில், சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த பட்டா வழங்குவதற்கான பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடித்துக் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962-ல் வந்தது. 1962-லிருந்து 2025 வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. 

இன்றைக்கு (நேற்று) முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாக ஒரு முடிவெடுத்து ஆறு மாதத்திற்குள் பட்டா வழங்கவேண்டும் என்று ஆணையிட்டது மட்டுமல்லாமல், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப் பணிகளை துவங்கி ஆறு மாத காலத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். அந்தப் பணிகளை நாங்கள் செய்யவிருக்கிறோம். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்ட மக்களுக்கும், மிகப் பெரிய வரப்பிரசாதமாக இது அமையவிருக்கிறது.

மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதே போல பிரச்சினையிருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்ந்து மொத்தம் 57,054 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அந்த உத்தரவையும் முதல்வர் வழங்கியிருக்கிறார்கள். 

ஏறத்தாழ 86,000 பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்த தீர்மானத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 86,000 பேர் போக இன்னும் விடுபட்டிருந்து மனுக்கள் வரும் என்று சொன்னால், அதையும் பரிசீலனை செய்யுங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்கள். 1962-லிருந்து 2025-வரை உள்ள பிரச்சினைக்கு தற்போது முடிவு செய்திருக்கிறார்கள்.

இதுவரை முதல்வர் ஆட்சி வந்த பிறகு, பத்து லட்சத்து இருபத்தி ஆறாயிரம் பேருக்கு நாங்கள் பட்டா வழங்கி இருக்கிறோம். முதல்வர் இன்னும் கொஞ்சம் விரைவுப்படுத்தி, வரும் 6 மாதத்திற்குள்ளாக 6 லட்சத்து இருபத்தி ஒன்பாதாயிரம் பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்தப் பணியையும் செய்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பொதுமக்கள் பொதுவாக கலைஞர் வழியில் முதல்வர் ஒரு தனி மனிதனுக்கு குடியிருப்பதற்கு இடமோ, வீடோ இல்லாமல் இருக்கக்கூடாத அந்த உணர்வோடு ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பெல்ட் ஏரியாவிற்கு எடுக்கப்பட்ட முடிவு மிகப் பெரிய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய முடிவாக இந்த முடிவு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து