முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் புதிய சூரிய மின் உற்பத்தி ஆலைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      தமிழகம்
CM-1-2025-02-06

நெல்லை, நெல்லையில் ரூ.6,874 கோடி மதிப்பில் டாடா மற்றும் விக்ரம் நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிறுவனங்களின் மூலம் 6,500 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

உலகப் புகழ்பெற்ற இந்திய குழுமமான, டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களான டி.சி.எஸ். டைடன், டாடா மோட்டார்ஸ், டாடா எலெக்ட்ரானிக்ஸ், தாஜ் ஹோட்டல்கள், தனிஷ்க் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளன. இந்நிலையில், டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் லிமிடெட் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிப்பதற்கு அவசியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் முதலீடு மேற்கொள்வதற்காக 2022-ம் ஆண்டு ஜூலை மாதம், இத்திட்டத்திற்கான முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது கூடுதலாக முதலீடு மேற்கொள்வதாக இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 ஜி.டபுள்யு சோலார் செல் மற்றும் மாடுல் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார். பின்னர், தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் வாழ்த்துகள் என்று எழுதி கையொப்பமிட்டார்.

பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இந்நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதிக திறன் கொண்ட சோலார் பி.வி. உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற விக்ரம் சோலார் லிமிடெட், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைக்கப்பட்ட 1.3 ஜி.டபுள்யு உற்பத்தித்திறன் கொண்ட இதன் ஆலை 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 ஜி.டபுள்யு சோலார் செல் மற்றும் 6 ஜி.டபுள்யு மாடுல் உற்பத்தித்திறன் கொண்ட விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிறுவனத்திலும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாபு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து