Idhayam Matrimony

கேப்டன் சாம்சன் சாதனை

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

ஐ.பி.எல்.-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி 32-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். இதற்கு முன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஷேன் வார்னே 31 ஆட்டங்களில் அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்து சாதனை படைத்திருந்தார்.

_____________________________________________________________________________________

இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் 

தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் போது ஆட்டத்தின் நடத்தை விதிகளை மீறிய குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இஷாந்த் சர்மா அவர் மீதான லெவல் 1 குற்றத்தை ஒப்புக்கொண்டதால், கள நடுவரின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்.லின் சட்டவிதிகள் 2.2-ன் படி, மைதானத்தில் இருக்கும் பொருள்கள் அல்லது கிரிக்கெட் உபகரணங்களை தேவையின்றி சேதப்படுத்துவதற்கு இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

_____________________________________________________________________________________

பாகிஸ்தானுக்கு அபராதம்

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் மௌண்ட் மாங்கனுவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் வழக்கமான நேரத்தைவிட பாகிஸ்தான் அணி ஒரு ஓவர் மெதுவாக பந்து வீசியதற்காக, அந்த அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக எலைட் பேனல் நடுவர் ஜெஃப் க்ரோவ் தெரிவித்தார்.

ஐ.சி.சி. சட்டவிதி 2.22-ன் படி மெதுவாக பந்துவீசும் அணிக்கு 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். களநடுவர்கள் கிறிஸ் பிரவுன் மற்றும் பால் ரீஃபல் இருவரும் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வான் இதை ஒப்புக்கொண்டார். முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________

பாட்மின்டன் பயிற்சியாளர் கைது 

பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி இரு ஆண்டுகளாக ஹுலிமாவு பகுதியில் பாட்மின்டன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், அங்கு பயிற்சியாளராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலாஜி சுரேஷ் (26) அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு கூடுதல் பயிற்சி தருவதாகக் கூறி பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரை வன்கொடுமை செய்த பாலாஜி சுரேஷ், இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலாஜி அந்தச் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

கடந்த மார்ச் 30 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில் தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, பாலாஜி வற்புறுத்தியதால் பாட்டியின் போனில் இருந்து தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அந்த புகைப்படங்களை போனில் பார்த்தபின் சிறுமியிடம் இதுபற்றி விசாரித்த அவரது பாட்டி, சிறுமியின் பெற்றோருக்கு உடனடியாக இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பாலாஜி சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர் அவர்மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

_____________________________________________________________________________________

இங்கிலாந்துக்கு புதிய கேப்டன்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) பட்லர் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் இங்கிலாந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. 

இதனையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து பட்லர் விலகுவதாக அறிவித்தார். அதன தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு கேப்டன் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் புதிய கேப்டனாக (ஒருநாள் + டி20) ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

_____________________________________________________________________________________

பிராவோவின் வித்தியாசமான செயல்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக லக்னோ அணி கொல்கத்தாவிற்கு சென்றுள்ளது. அங்கு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இதுவரை 4 போட்டிகளில் ஆடி 201 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை  கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் பயிற்சியை மேற்கொண்டு வரும் நிக்கோலஸ் பூரனின் கால்களை,  நகைச்சுவைக்கு பெயர் பெற்ற பிராவோ தொட்டு வணங்கி உள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட்டில் சகோதரத்துவத்தின் நட்பு மற்றும் மரியாதைக்குரிய தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும் நகைச்சுவையாகத் தோன்றும் இந்த சைகை, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

_____________________________________________________________________________________

ஜெசிகா பெகுலா சாம்பியன்

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சார்லஸ்டன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றைய பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சக நாட்டவரான சோபியா கெனின் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சோபியா கெனினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

_____________________________________________________________________________________

அணியில் வங்காளதேச வீரர்

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான நசீர் ஹொசைன் 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். அந்த கால கட்டங்களில் 115 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் அடித்துள்ளார். இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக நசீர் ஹொசைன் 6 மாத இடைநீக்கத்துடன் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டார். 

அதன் காரணமாக அவர் உள்ளூர் தொடர்கள் உள்பட எந்த கிரிக்கெட்டிலும் களமிறங்கவில்லை. இந்நிலையில் அவரது தடை காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கலாம் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து