முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.12 - இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:-

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டில் மறு குடியமர்த்துவதற்காகவும், மறுவாழ்வு அளிப்பதற்காகவும், இந்திய நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய பாராளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்து, அதில் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு அனுப்ப நான் முடிவு செய்தேன். 

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது.  எனவே தான், கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்ற பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுத்தேன்.  

இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மாறாக, ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை எதிர்த்து மத்திய அரசு செயல்படுவதாக இருந்தது.  அமெரிக்காவின் தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கடிதங்கள் மூலம் வலியுறுத்தியதை அடுத்து, இறுதி வரை அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஒரு தெளிவற்ற நிலையைக் கடைபிடித்த மத்திய அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் கடுமையை குறைத்து, அதை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து, அதில் வெற்றியும் பெற்று அதன் பின் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்பதால் அதற்கு நன்றி பாராட்டினேன்.   

எனவே, இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் என்றும் நம்பினேன். அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளை பார்வையிட்டு, அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் அது உதவும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப நான் சம்மதித்தேன்.   இந்தச் சூழ்நிலையில், இலங்கை பயணம் குறித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களை கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாததாக அமைந்துள்ளது.  இலங்கை அதிபர் ராஜபக்ஷே உட்பட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகள் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.  இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் எற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும் தான் தெரிகிறது. இது மட்டுமல்லாமல், இக்குழுவில் பத்திரிகையாளர்கள்,  மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம் பெறாதது எனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் குழுவின் பயணமும், ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்றது போல் ஒரு கண்துடைப்பு ஏற்பாடாக ஆகிவிடும் என்று நான் கருதுகிறேன். ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் மென்மையான தீர்மானத்தைக் கூட இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையிலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபக்ஷே அரசு தடுத்து நிறுத்தாததாலும், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளதன் அடிப்படையிலும், தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் இலங்கை அரசிடம் எந்தவிதமான மாற்றமும் தெரிய வராததாலும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல் ஆகியவை பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் யதார்த்தங்களை பற்றியும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயுடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப் பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபக்ஷேவுடன் காலை விருந்துக் கூட்டம் என்பது மட்டும் பயணக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்பதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொள்கிறது என்பதையும், இந்தக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்  வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago