முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம்

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஏப்.17 - சித்திரை திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மதுரை மீனாட்சிக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கல்யாண காட்சியை தரிசித்தனர்.   உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் தினந்தோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது இந்த கோவிலுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலின் திருவிழாக்களில் சித்திரை திருவிழாவும்,திருக்கல்யாணமும் உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த வியாழக்கிழமை   மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திக் விஜயம் நடைபெற்றது.  தினமும் பல்வேறு வாகனங்களில் சாமியும் அம்மனும் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் 10 ம் நாளான நேற்று மாணிக்க மூக்குத்தி மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை 10.30 மணியில் இருந்து 10.59க்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. 

திருக்கல்யாணத்திற்காக சுந்தரேசுவரரும், ப்ரியாவிடையும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்தனர். முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினர். அதிகாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர். மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு சுவாமி, ப்ரியாவிடை, மீனாட்சி அம்மன் வந்தனர். இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த முருகப்பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

    குலசேகரபட்டர் வழி சிவச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டி பட்டர் வழிச்சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் அணிந்து கல்யாணத்தை நடத்தினர். மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவாச்சாரியார் சுவாமிக்கு பாதபூஜை செய்தார். பின்னர் காப்புகட்டிய கணேஷ்பட்டர் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்தார். பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்யபூஜை போன்றவை நடைபெற்றது. சுவாமி,ப்ரியாவிடை, மீனாட்சிக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. இதன்பிறகு சுவாமியும், அம்பாளும் மூன்று முறை மணவறையை சுற்றி வந்து மாலை மாற்றிக்கொண்டனர். சுவாமி, ப்ரியாவிடைக்கும், மீனாட்சிக்கும் பட்டு வஸ்திரமும், பட்டு சேலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எப்போது மாங்கல்ய நாண் பூட்டு நிகழ்ச்சி நடைபெறும், அந்த கண்கொள்ளா காட்சியை காண்போம் என்ற பேராவலில் இருந்த பக்தர்களின் கண்களுக்கு இனிய நிகழ்வாக, மேளம் தாளங்கள் முழங்க, வேதமந்திரங்கள் விண்ணை பிளக்க 10.55 மணிக்கு மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சியின் கழுத்தில் சுந்தரேசுவர கடவுள் மங்கள நாணை பூட்டினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாயே, மீனாட்சியே காப்பாற்ம்மா என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டனர்.

    இதை தொடர்ந்து திருக்கல்யாணத்தை காணவந்த பெண்கள் தங்கல் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்து புதிய மஞ்சள் கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிவிந்து கொண்டனர். சில தம்பதியினர் தனது கணவனின் கையில் புதிய திருமாங்கல்யத்தை கொடுத்து அணிவிக்கச்செய்தனர். திருக்கல்யாணம் முடிவடைந்ததும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதன் பிறகு மீனாட்சியும், சுந்தரேசுவரரும் தம்பதியர் சகிதமாக ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். இங்கும் மாலை வரை ஏராளமான பக்தர்கள் வந்து கல்யாண கோலத்தில் இருந்த அன்னையையும், அப்பனையும் தரிசித்து சென்றனர். திருக்கல்யாணத்தையொட்டி கோவிலுக்குள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மேலும் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.

   மீனாட்சி திருக்கல்யாணத்தை காண சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் திரண்டனர். ஆடிவீதி முழுவதிலும் பெரிய டிவிக்கள்வைக்கப்பட்டு திருக்கல்யாண காட்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருக்கல்யாணம் முடிந்து நேற்று மாலை அம்மனும், சாமியும் பூப்பல்லக்கில் எழுந்தருளினர். இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. சிறிய தேரில் மீனாட்சியும், பெரிய தேரில் சுந்தரேசுவரும், ப்ரியாவிடையும் எழுந்தருளுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago