முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டமன்ற கூட்டத்தின் பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்

புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், மார்ச். - 1 - கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்ட தொடர் இன்று ஆரம்பமாகிறது.  இன்றைய தினம் கவர்னர் மரபுப்படி உரை நிகழ்த்துகிறார். இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட திட்டமிட்டிருப்பதால் இந்த கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரண்டு இந்திய மீனவர்கள் இத்தாலி கப்பலை சேர்ந்த பாதுகாவலர்களால் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினை மற்றும் அரசியல் பிரச்சினை, அரசியல் அல்லாத பிரச்சினைகள் ஆகியவற்றை எழுப்ப பல கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் இந்த கூட்டத் தொடரில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில் பிரவம் சட்டமன்ற தொகுதியில் வரும் 17 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினையை இம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பூதாகரமாக்கி அதில் குளிர்காய்ந்தன. ஆனால் பாதிக்கப்பட்டது என்னவோ, இரு மாநில மக்கள்தான். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்று கொக்கரிக்கிறார்கள் அவர்கள். ஆனால் கட்ட விட மாட்டோம் என்று கொந்தளிக்கிறார்கள் தமிழர்கள். இதையடுத்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இருமாநிலங்களிலுமே அமைதியற்ற சூழ்நிலை நிலவியது. இப்போதுதான் ஓரளவிற்கு அமைதி திரும்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் கேரள சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. அது மட்டுமல்ல, உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டு பூர்த்தியடந்து விட்டது. எனவே உம்மன்சாண்டியின் சாதனைகளை வெளிப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் அவரது பாதகங்களை அம்பலப்படுத்த கம்யூனிஸ்டு முடிவெடுத்துள்ளது. இதனால் இக்கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும். இந்த கூட்டத் தொடரில் நிதியமைச்சர் கே.எம். மணி, 2012 - 13 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சபையில் வரும் 19 ம் தேதி தாக்கல் செய்கிறார். அப்போது பல சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நாளை 2 ம் தேதி சட்டசபை கூடியதும் மறைந்த கவர்னர் எம்.ஓ.ஹெச். பாரூக்கிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். எம்.ஓ.ஹெச். பாரூக் , கேரள கவர்னராக பணியாற்றியவர். இவர் கடந்த ஜனவரி மாதம் மரணமடைந்தது நினைவிருக்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்