முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டைத் தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கத் தொடர்ந்து செயலாற்றுங்கள் தி.மு.க. அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: மக்கள் நலனுக்காகப் புதிய திட்டங்களைக் கொண்டுவந்து, தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தைச் செம்மையாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டைத் தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றுங்கள் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 'விஷன் 2023' என்ற தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில் வளர்ச்சிக்காகப் போடப்பட்டன. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015-ல் முதல்வர் ஜெயலலிதாவும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2019-ல் ஜெயலலிதாவின் அரசும் நடத்தி பல்லாயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது.

இதனால், பல்லாயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். உலக முதலீட்டாளர் மாநாடு 2015-ல் பல்வேறு துறைகள் சார்பாக கையொப்பமிட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் கையெழுத்திடப்பட்ட 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இதன் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடு 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாயாகும். இதன் மூலம் 4.70 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில், 72 சதவிகித திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், 73,711 கோடி ரூபாய் முதலீடுகளும், 1.86 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

2019-ல் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் கையெழுத்திடப்பட்டன.

இவற்றில் 24,492 கோடி ரூபாய் முதலீட்டில் 1,10,844 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி அளித்துள்ள 81 திட்டங்கள் அதாவது, 27 சதவீத திட்டங்கள் ஒரே ஆண்டில் தமது வணிக உற்பத்தியைத் தொடங்கி சாதனை படைத்துள்ளன. மேலும் 2.20 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 5.33 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி அளித்துள்ள 191 திட்டங்கள் பல்வேறு நிலையில் முன்னேற்றத்தில் உள்ளன.

வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களில், 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை, தமிழ்நாட்டுக்கு ஈர்த்து, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கவும், "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தைக் கடந்த சட்டப் பேரவையில் நான் அறிவித்து, நேரடியாகச் சென்று அமெரிக்காவில் தொடங்கி வைத்தேன். இது தவிர, கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020-ல் மே மாதம் முதலே தொழில் துறையின் வளர்ச்சிக்காக தொழில் துறைச் செயலாளர் தலைமையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் முனைவோரை அழைத்து நானே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இதன் பயனாக, 2020-21 நடப்பு ஆண்டில் மட்டும் 60,674 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1,00,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும், DLF நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் முதலீட்டிலான தகவல் தொழில்நுட்பப் பூங்கா திட்டம், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் அசன்டாஸ் ரேடியல் ஐ.டி. பார்க் திட்டம், 250 கோடி ரூபாய் முதலீட்டில் பட்டாபிராம் டைடல் பார்க் திட்டம், 250 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூர் வானூர்தி பூங்காவில் நவீன AEROHUB திட்டம் எனப் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

முதல்வராக நான் இருந்தபோது எனது தலைமையிலான உயர்நிலைக் குழு, 39,941 கோடி ரூபாய் முதலீட்டிலான 62 பெரும் தொழில் திட்டங்களை ஆய்வு செய்து உடனுக்குடன் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதலீடுகளை ஈர்க்கும் வழிகாட்டி நிறுவனம் பெருமளவில் வலுப்படுத்தப்பட்டு, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, கொரியா குடியரசு, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற முக்கிய நாடுகளுக்கான பிரத்யேக அமைவுகள் (Country Specific Desks) அமைக்கப்பட்டுள்ளன.

மும்பையைச் சேர்ந்த "Projects Today" நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020ஆம் ஆண்டு கோவிட் - 19 காலகட்டத்தில், முதலீடுகளை ஈர்ப்பதில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. அரசால், "மின்சாரக் கொள்கை, 2019" உருவாக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன. இதனால்தான், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் "எர்த்தர் எனர்ஜி நிறுவனமும்" போச்சம்பள்ளியில் மின்சார இருசக்கர வாகன உற்பத்திகளை ஓலா நிறுவனமும்" தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம், 14-ம் தேதி, "ஓலா" நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், 2,354 கோடி ரூபாய் முதலீட்டில், உலகத்திலேயே மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலையை மொத்தம் 500 ஏக்கர் நிலபரப்பில் "ஓலா" நிறுவனம் அமைத்து வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் மின்சார இருசக்கர வாகனங்கள், வரும் 2022-ல் வாகன சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன என்று கடந்த 2021 மார்ச் 9-ம் தேதி ஓலா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், படிப்படியாக 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க. அரசின் தொழில் துறை அமைச்சர் ஏதோ இவர்கள் இந்த இருசக்கர வாகனத் தொழிற்சாலையை தி.மு.க. அரசுதான் ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் கொண்டுவந்தது போன்ற மாயையை ஏற்படுத்த முயல்கிறார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதைக் குறைக்கவும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய, கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய பரப்பில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க உள்ளது என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க. அரசு எடுத்த முயற்சியால் ஓலா நிறுவனம் ஏற்கெனவே பணிகளைத் தொடங்கி தற்போது முடிவடையும் நிலையில் உள்ள ஒரு திட்டத்தை, ஏதோ இந்த ஒன்றரை மாதக் காலத்தில் கொண்டுவந்ததுபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது வியப்பாக உள்ளது.

அ.தி.மு.க.வின் அரசால் கொண்டுவந்த திட்டங்களை, தாங்கள் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் கொண்டுவந்ததுபோல் பேசுவது ஏற்புடையதல்ல. இந்தப் போக்கைக் கைவிட்டு, ஜெயலலிதாவின் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைக் காழ்ப்புணர்ச்சி கொண்டு முடக்காமல் மக்கள் நலனுக்காகப் புதிய திட்டங்களைக் கொண்டுவந்து, தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தைச் செம்மையாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டைத் தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கத் தொடர்ந்து செயலாற்றுங்கள் என்று இந்த ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து