முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இலங்கையில் ரணில் அரசுக்கு சஜித் பிரேமதாச திடீர் ஆதரவு : எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பால் பரபரப்பு

திங்கட்கிழமை, 16 மே 2022      உலகம்
Sajid-Premadasa 2022 05 16

Source: provided

கொழும்பு : இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி திடீரென ஆதரவு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தான் ஆதரவு அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முடிவு எடுத்துள்ளது. நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவே ரணில் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக விளக்கம் அளித்துள்ளார். இலங்கை அரசின் பொருளாதார நலன்சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். ரணிலின் ஆட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்தால் ஆதரவு திரும்ப பெறப்படும் என சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக ரணில் பதவியேற்ற போது சஜித் பிரேமதாச  எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது திடீரென ஆதரவு அளித்திருக்கிறார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கடந்த 9ம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கொழும்பு முழுவதும் வன்முறை பரவியது. தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனிடையே, 4வது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.

இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி காலேவில் போராட்டம் நீடித்து வருகிறது. இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட பூஜ்யம் என்றாகிவிட்ட நிலையில் அதனை அதிகரிக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்கே இறங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் பல நாடுகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் அரசுக்கு சஜித் பிரேமதாச ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து