முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி உட்பட 3 பேர் அடங்கிய சர்வதேச அமைதி ஆணையம் அமைக்க ஐ.நா.வுக்கு மெக்ஸிகோ அதிபர் பரிந்துரை

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      உலகம்
maxico-president------2022-08--11

Source: provided

மெக்ஸிகோ சிட்டி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 169-வது நாளை எட்டியது. போரால் உக்ரைனை சேர்ந்த 1.2 கோடி பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், சீனா, தைவான் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. தைவானை ஆக்கிரமிக்க சீனா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போதைய சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் அணிவகுத்து வருகின்றன.

இதேநிலை நீடித்தால் 3-ம் உலகப் போர் ஏற்படக்கூடும். அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஒபரடோர், அந்த நாட்டு தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலகின் பல்வேறு பகுதிகளில் போர், உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதைய சூழலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால் உலகின் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.நா. சபை மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்த சர்வதேச அமைதி ஆணையத்தை அமைக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஐ.நா. சபையில் விரைவில் பரிந்துரை கடிதத்தை அளிக்க உள்ளேன். சர்வதேச அமைதி ஆணையத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போப் பிரான்சிஸ், இந்திய பிரதமர் மோடி ஆகிய 3 பேரை நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆணையம் செயல்பட வேண்டும். உலகின் எந்த மூலையிலும் போர் நடைபெறக்கூடாது. போரினால் சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுகின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் உள்ளிட்ட பல்வேறு தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

சர்வதேச அரங்கில் ஐ.நா.பொதுச்செயலாளர் குத்தேரஸ், போப் பிரான்சிஸ், இந்திய பிரதமர் மோடிக்கு செல்வாக்கு உள்ளது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து