முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதிர்ந்த மலராக வாடிப்போன ஒருநாள் கிரிக்கெட் - இயன் சாப்பல் வேதனை

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      விளையாட்டு
Ian-Chappell 2023-10-02

Source: provided

மும்பை : டி20 கிரிக்கெட்டுகளுக்கு, அதாவது தனியார், தேசிய டி20 கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருநாள் போட்டிகளுக்குக் கொடுக்கப்படாததால் அனைவரும் சேர்ந்து ஐசிசி கூட்டணியுடன் ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு வடிவமாக உதிர்ந்து போகச் செய்து விட்டனர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் முன்னாள் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வேதனை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கான ஆங்கில இணையதளம் ஒன்றில் இது தொடர்பாக அவர் எழுதிய பத்தி ஒன்றில், “நிர்வாகிகள் டி20 கிரிக்கெட்டை பெரிய அளவுக்கு ஆதரித்து ஒருநாள் கிரிக்கெட்டை காலி செய்து விட்டனர், இப்படி காலியாவதற்கு அனுமதித்த வீரர்களும் குற்றவாளிகளே” என தெரிவித்துள்ளார்.

ஆம், முன்பெல்லாம் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. ஷார்ஜாவில் சில வேளைகளில் ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை ஒருநாள் கிரிகெட்டும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்று முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் என்னும் கருத்தாக்கமே காணாமல் போய் விட்டது. ஐசிசி ஒரு கட்டத்தில் எதிர்காலப் பயணத்திட்டத்தில் முத்தரப்பு கிரிக்கெட்டைச் சேர்த்தாலும் பணபலமுள்ள பிசிசிஐ, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு ஒப்புக் கொள்வதில்லை. ஆகவே வெறும் இருதரப்பு ஒருநாள் தொடராகக் குறுக்கப்பட்டு அதுவும் அளவில் குறைக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அவர் அந்தப் பத்தியில் கூறியிருப்பதாவது: டி20 கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு உள்ளது. இதனால் பணத்தைப் பெருக்க டி20 கிரிக்கெட்டை பெரிய அளவில் வாரியங்கள் வளர்த்து விடுகின்றன. கிரிக்கெட்டை நிதியளவில் பெரிய அளவில் டி20 உயர்த்தியது என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை புறமொதுக்கி இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஒருநாள் கிரிக்கெட்டை இன்று உதிர்ந்து வாடிய பூவாக்கி விட்டது. அதாவது ஆட்டத்தின் அமைப்பாக்கத்தில் டி20க்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் விகிதாச்சார அளவுப்படி மேலதிகமானது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் என்பது உலகக்கோப்பையை நம்பியே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. அதுவும் பிளாக்பஸ்டர் போட்டியாக பெரிய அளவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஊதிவிட்டு வருகின்றனர்.

1996-ல் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்ற தொடர் ஒன்றில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற போது நான் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தேன். அப்போது இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் நட்பு ரீதியாக ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நான் இந்த வீரர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் கேட்டேன்: ஏன் இருநாடுகளுக்கும் இடையே பகை, நீங்கள் இரு அணி வீரர்களும் நன்றாகத்தானே பழகுகிறீர்கள் என்று கேட்டேன்.

அப்போது பதில் இவ்வாறு எனக்குக் கிடைத்தது, “நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம், இருவரும் ஒரே உணவைத்தான் உண்கிறோம். ஆகவே மக்கள் நன்றாக ஒருவருடன் ஒருவர் பழகுகின்றனர். அரசியல்வாதிகள்தான் பகைமையை தக்க வைக்க முயற்சிக்கின்றனர்” என்றார் ஒரு வீரர். இது வருத்தத்திற்குரியது, ஆனால் உண்மையான கூற்று. இதற்குப் பிறகே உறவுகள் மேலும் மோசமடைந்துதான் போய்விட்டது.

நன்றாக ஆடப்படும் ஒருநாள் கிரிக்கெட்டை ரசிகர்கள், வீரர்கள் என்று அனைவரும் விரும்பவே செய்வார்கள். முதலில் 60 ஓவர்களாக தொடங்கிய உலகக்கோப்பையில் 1975-ல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் போராட்ட குணத்தை மீறியும் வெஸ்ட் இண்டீஸ் அருமையாக ஜெயித்தது. அதன் பிறகே 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. இன்று டி20 கிரிக்கெட்டினால் மலர்ச்சியின்றி வாடிப்போயுள்ளது. டி20 பணமழை, ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வருவாய், வீரர்களுக்கு ஏகப்பட்ட பணம் என்று கொட்டிக் கொடுக்க ஒருநாள் கிரிக்கெட்டை சாவிலிருந்து மீட்க நிர்வாகிகள் தந்திரங்களில் ஈடுபட்டனர். பவர் ப்ளே, பவுண்டரிகளின் நீளத்தை குறைப்பது, பவுலர்களையும் பவுலிங்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கும் விதிமுறைகள், பேட்டிங் பிட்ச், இது கேப்டன்களின் கற்பனை வளத்தைப் பதிலீடு செய்து கேப்டன்களின் சிந்தனையையே கட்டுப்படுத்தத் தொடங்கியது.

பவர் ப்ளே என்பது இல்லாத காலத்தில் கேப்டன்களுக்கு பெரிய சவால், களவியூகம் அமைப்பதில் அவர்களது புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. இப்போது ஆட்டத்தின் கண்டிஷன்கள் கேப்டன்களைக் கட்டுப்படுத்தி அவர்களை வெற்றாக்கி விட்டது. ஒரு அணியில் 2 பவுலர்கள் 10 ஓவர்கள் கட்டுப்பாடில்லாமல் அதிக ஓவர்கள் வீசலாம் என்று அனுமதிக்கலாம். இதன் மூலம் எதிரணியைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் கேப்டன்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த முடியும், ஆட்டமும் சுவாரஸ்யமடையும்.

50 ஓவர் கிரிக்கெட்டை முன்னேற்ற நிறைய வழிகள் இன்னும் உள்ளன. சிந்தனாபூர்வமாக மாற்றங்களைக் கொண்டு வந்து ஒருநாள் கிரிக்கெட்டை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். ஆனால் அவை தழுவப்படவில்லை. ஒருநாள் கிரிக்கெட் உதிர்ந்த மலராக வாடி வீழ்ந்து வருகின்றது. ஆனாலும் உலகக்கோப்பை என்பது இன்றும் பெரிய அளவுக்கு ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. ஆகவே 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இன்னும் உயிர் இருப்பதை மெய்ப்பிக்கிறது. இவ்வாறு இயன் சாப்பல் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து