முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாசலில் வண்ணக் கோலமிட்டு தை மகளை நாம் வரவேற்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      தமிழகம்
stalin 2024-12-30

Source: provided

சென்னை : இன்பம் பொங்கும் தமிழ்நாடு என இல்லத்தின் வாசலில் வண்ணக் கோலமிட்டு, தை மகளை நாம் வரவேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சமத்துவமே தமிழரின் பண்பாடு என்பதை உலகத்திற்கு உரக்கச் சொல்கின்ற வகையில் சாதி மத பாலின பேதமின்றி, இயற்கையைப் போற்றி, உழைப்புக்கு முதல் மரியாதை செலுத்தி, உழவுக்குத் துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மனிதநேயத் திருவிழாதான் பொங்கல் நன்னாள். அது ஒன்றுதான் நம் பண்பாட்டுத் திருநாள் என்பதைத் திராவிட இயக்கம் நிலைநாட்டி, மக்களின் திருவிழாவாகக் கொண்டாடச் செய்து வருகிறது.

தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறுவிதமான பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். இல்லத்தில், உள்ளத்தில், உணர்வினில், கலையில், இலக்கியத்தில், வீர விளையாட்டுகளில், வாழ்வியல் நடைமுறைகளில் தமிழர்களுக்கெனச் சிறந்த பண்பாடு உண்டு என்பதைக் காட்டுகின்ற வகையில் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் வாழ்கின்ற மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். வேளாண் உழைப்பின் விளைச்சலைப் போற்றும் வகையில் புதுப்பானையில் பொங்கலிட்டு, தங்கள் வாழ்க்கையில் விடியல் தந்த சூரியனுக்கு அதைப் படையலிடும் பழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள்.

அறுவடைத் திருநாளாம் பொங்கலின் அடையாளம் என்பது, வாழ்க்கையில் விடியல் ஏற்பட வேண்டும் என்பதுதான். அதனால்தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையுடன் பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் உண்மையான மகிழ்ச்சிப் பொங்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களின் வாழ்விற்கு விடியல் தரும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.

சமத்துவம் என்பதைச் சொல்லாக இல்லாமல், செயலாக நிறைவேற்றும் திருநாளாம் பொங்கல் நன்னாளைப் பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் தலைநகர் சென்னையில் நாட்டுப்புறக் கலைகளை மக்கள் மன்றத்தில் அரங்கேற்றும் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா 2025 ஜனவரி 13 முதல் 17ம் தேதி வரை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. தமிழர்கள் அனைவரும் அவரவர் ஊர்களில் நம் பண்பாட்டுப் பெருமை மிக்க நிகழ்வுகளை நடத்தி மகிழ்ந்திட வேண்டும்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு, நாள்தோறும் வன்மத்துடன் வதந்திகளைப் பரப்பிட முனையும் அரசியல் எதிரிகள் இவற்றை எதிர்கொண்டபடியே, தெளிவான திட்டங்களுடனும், துணிவான செயல்பாடுகளுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், நிர்வாகத் திறனுடனும் கடமையாற்றும் திராவிட மாடல் அரசின் ஆட்சியில் அன்றாடம் நிறைவேறும் சாதனைகளால், ஏழாவது முறையாக தி.மு.க.வே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். பொதுமக்கள் பங்கேற்புடன் பண்பாட்டுத் திருவிழாவாக, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம். 'இன்பம் பொங்கும் தமிழ்நாடு' என்று ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம். மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கலை கொண்டாடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து