முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.60 லட்சம் கோடி நிதி கேட்கவில்லை: மத்திய அரசு மறுப்பு

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.60 லட்சம் கோடி உபரி நிதியை மத்தியஅரசு கேட்கவில்லை என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கம் அளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியிடம் உபரியாக இருக்கும் ரூ.3.60 லட்சம் கோடியை மத்திய அரசு தனது நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்து கொள்வதற்காக கேட்டு நெருக்கடி கொடுப்பதாகக் கடந்த சில நாட்களாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இந்தவிளக்கத்தை மத்தியஅரசு அளித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்தபோதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய அரசு நியமித்தது.

கடும் விமர்சனம்

அந்த குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், இருதரப்புக்கும் இடையே மறைமுகமாக இருந்து வந்த உரசல் சமீபத்தில் வெளிச்சமானது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்தியஅரசை கடுமையாக விமர்சித்தார். டி-20 கிரிக்கெட் போட்டி போன்று மத்தியஅரசு முடிவுகள் எடுக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கி டெஸ்ட் போட்டிகளைப் போன்று முடிவுகள் எடுக்கிறது. ரிசர்வ் வங்கியின் தனித்தன்மை சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதை கருத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் கூறியிருந்தார்.

மத்திய அரசு அழுத்தம்

இந்த சூழலில் ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க இருக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகின.

மத்திய அரசு மறுப்பு

இந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் அதிகமாகிவிட்டது, வரும் 19-ம் தேதி நடைபெறும் வாரியக் கூட்டத்தில் அவர் ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இதனிடையே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்று குற்றம்சாட்டியது. தேர்தல் செலவுக்காக ரூ. 1 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்தவிதமான நிதியையும் மத்திய அரசு கோரவில்லை என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கம் அளித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து