முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை போல் புதுவையிலும் அனைத்து சமூக நலத் திட்டங்கள் வழங்கப்படும் - முதல்வர் ஜெயலலிதா உறுதி

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

புதுவை : புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க  சட்டம் கொண்டுவரப்படும் என்றும், விலையில்லா மிக்சி. கிரைண்டர் மற்றும் மி்ன்விசிறிகள் வழங்கப்படும் என்றும், தமிழகத்தை போல் புதுவையிலும் அனைத்து சமூக நலத் திட்டங்கள் வழங்கப்படும் என அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

புதுச்சேரியில் போட்டியிடும்  30 அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அங்குள்ள உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் முதல்வரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான, தமிழ்நாட்டிலேயே இவ்வளவு பெரிய வளர்ச்சியை, திட்டங்களை எங்களால் கொடுக்க முடிந்து இருக்கிறது என்றால், சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியை வளர்ச்சியுறச் செய்வது எங்களுக்கு  மிக எளிது. அ.தி.மு.க.  ஆட்சி புதுச்சேரியில் அமையப்பெற்றால், புதுச்சேரிக்கு நிதி சலுகையுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்தைபெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.  புதுச்சேரி அரசின் கடன் சுமையான 6,400 கோடி ரூபாயை முற்றிலும் தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுச்சேரிக்கென புதிய தொழில் கொள்கையினை உருவாக்கி அதன் மூலம் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரவும், இடம் பெயர்ந்த தொழிற்சாலைகளைமீண்டும் கொண்டு வரவும், நலிந்த தொழிற்சாலைகளை வலுவடையச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு தொழில்கள் துவங்க ஊக்கம்அளிக்கப்படும். அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஒற்றை சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில்  தொழில் வளாகம் ஏற்படுத்தப்படும். 

தமிழ்நாட்டில் உள்ளது போல், புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்படும். செயல்படாத நிலையில் உள்ள புதுச்சேரி விமான நிலையத்தை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாணவ, மாணவியருக்கு அனைத்துக் கல்வி உபகரணங்களும் விலையில்லாமல் வழங்கப்படும்.  தமிழ்நாட்டில் வழங்குவது போல், இலவசமாக விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீறுடைகள், காலணிகள், அட்லஸ்கள், வரைபடங்கள், ஜாமெட்ரி பாக்சுகள், புத்தகப் பைகள், கலர் பென்சில், கிரேயான்கள் அனைத்தும் வழங்கப்படும்.  எல்லாவற்றுக்கும் மேலாக மிதி வண்டிகளும்,

மடிக்கணினிகளும் வழங்கப்படும். மத்திய பல்கலைக்கழகத்தில் 50 விழுக்காடு இடங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சமூக நலத் திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரியிலும் செயல்படுத்தப்படும். தமிழ் நாட்டில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகின்றன.

அதைப் போலவே புதுச்சேரியிலும் வழங்கப்படும்.  கைவிடப்பட்ட பெண்கள், ஏழைத் தாய்மார்கள், பெண்கள் குடும்பத் தலைவராக இருக்கின்ற குடும்பங்களுக்கு கறவைப் பசுக்களும், வெள்ளாடுகளும் தமிழ் நாட்டில் வழங்கப்படுகின்றன. அதைப் போலவே புதுச்சேரியிலும் வழங்கப்படும்.  மகளிர் திருமண உதவித் திட்டம் இங்கேயும் செயல்படுத்தப்படும். 

தமிழ் நாட்டில் வழங்கப்படுவது போல் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்.  திருமண உதவியாக பெண்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும்.  பட்டப் படிப்பு அல்லது பட்டயம் படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.  பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவை இங்கேயும் செயல்படுத்தப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவங்கப்படும்.  அவர்கள் சொந்த தொழில் துவங்க வங்கிக் கடன் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

புதுச்சேரி காரைக்காலில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படுவதோடு, அங்கேயே உயர் சிகிச்சைகள் பெறுவதற்கான வசதிகள் உருவாக்கித் தரப்படும். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 மருத்துவ இடங்கள் 250 ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதே போன்று மருத்துவ மேற்படிப்பிற்கான இடங்களும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.  இதில் புதுச்சேரியை சேர்ந்த மாணவ மாணவியருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்திட வழிவகை செய்யப்படும்.காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று துவங்கப்படும். புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் அன்னதானத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் வாழும் இந்துக்களுக்கு மானசரோவர் மற்றும் முக்திநாத் செல்ல மானியம் வழங்கப்படுகிறது. அந்தச் சலுகைகள் புதுச்சேரியிலும் வழங்கப்படும். திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதோடு, ஸ்ரீரங்கத்தில் உள்ளது போன்று   இங்கு யாத்ரி நிவாஸ் அமைத்துத் தரப்படும்.ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும். இஸ்லாமியர்களுக்கும், ஜெருசலம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும், தமிழகத்தில் வழங்கப்படுவது போன்ற சலுகைகள் புதுச்சேரியிலும் வழங்கப்படும். மூடிக் கிடக்கும் ரோடியர், சுதேசி, பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகள் புனரமைக்கப்பட்டு அங்கு பணி புரிந்த 15,000 தொழிலாளர்களுக்கும் மறுவாழ்வு அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

ஏழை எளியோர் நலம் பெறும் வகையில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடிகள் ஆகிய திட்டங்கள் புதுச்சேரியிலும் செயல்படுத்தப்படும்.  புதுச்சேரி மாநில காவல் துறை நவீனப்படுத்தப்படும். ஏழை, எளிய மக்கள் உயர் சிகிச்சைக்காக தமிழ் நாட்டில் உள்ளது போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கவும், மானிய விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை,கோதுமை ஆகியவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக கிடைத்திட வழி வகை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்