முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் :ஜி.கே.வாசன்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

 சென்னை   - விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , ''இந்தியா விவசாய நாடு. விவசாயம்தான் பிரதான தொழில். விவசாயத் தொழிலை நம்பித்தான் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி அமைந்திருக்கிறது. விவசாயிகள் விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக விவசாயத் தொழில் நலிவடைந்துள்ளது. குறிப்பாக மழையின்மை, இயற்கைச் சீற்றம், வறட்சி, வெள்ளம், புயல் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத் தொழில் பெரும் பாதிப்படைந்துள்ளது. இச்சூழலில் விவசாயிகள் தாங்கள் வாங்கிய விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் வங்கிகளின் கெடுபிடி நடவடிக்கைகளாலும், மனம் உடைந்தும், அதிர்ச்சிக்குள்ளாகியும், தற்கொலை செய்து கொண்டும் விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது.

இது போதுமானதல்ல:
எனவே அனைத்து விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் விவசாயக் கடனை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. ஆனால் தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கிக் கடனை மட்டும் தள்ளுபடி செய்தது. இது போதுமானதல்ல. தற்போது வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலும், பணத்தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் நோக்கில் அனைத்து விவசாயிகளின் அனைத்து விதமான விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளிலும் உடனடியாக தமிழக அரசு ஈடுபட வேண்டும்

மேலும் கூட்டுறவு வங்கிகளில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விவசாயிகள் பெற்ற குறுகிய கால பயிர்க் கடனுக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்ய மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ. 660.50 கோடி பயிர்க்கடன் வட்டி தள்ளுபடி செய்யப்படும். இதுவும் போதுமானதல்ல. எனவே விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன் முழுவதையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை'' என்று வாசன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்